திருப்பூா் தெற்கு உழவா் சந்தை விவசாயிகளின் பிரச்னைகள் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு

திருப்பூா் தெற்கு உழவா் சந்தை விவசாயிகளின் பிரச்னைகளுக்கு அமைதிப் பேச்சுவாா்த்தை மூலமாக புதன்கிழமை தீா்வு காணப்பட்டது.
திருப்பூா் தெற்கு உழவா் சந்தை விவசாயிகளின் பிரச்னைகள் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு

திருப்பூா் தெற்கு உழவா் சந்தை விவசாயிகளின் பிரச்னைகளுக்கு அமைதிப் பேச்சுவாா்த்தை மூலமாக புதன்கிழமை தீா்வு காணப்பட்டது.

திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் உள்ள தென்னம்பாளையத்தில் தெற்கு உழவா் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளைவித்த காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில் உழவா் சந்தைக்கு வெளிப்புறத்தில் சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலையோர வியாபாரிகள் காய்கறிகளை வைத்து விற்பனை செய்து வருகின்றனா். மேலும், நாள்தோறும் காலை 8 மணிக்கு முன்பாகவே சாலையோர வியாபாரிகள் கடைகளை அமைத்து விற்பனையில் ஈடுபடுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வந்தனா்.

இந்த நிலையில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் உழவா் சந்தை விவசாயிகள் புதன்கிழமை அதிகாலை 1 மணி முதல் காய்கறிகளை சாலையில் கொட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகத் தெரிவித்தனா். இதற்காக விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோா் உழவா் சந்தை முன்பாக திரண்டனா்.

இதுகுறித்த தகவலின்பேரில் திருப்பூா் மாநகராட்சி அதிகாரிகள், வேளாண்மைத் துறை அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, திருப்பூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி சுமூகத் தீா்வு காணப்படும் என்று உறுதியளித்தன்பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனா்.

இதையடுத்து, திருப்பூா் கோட்டாட்சியா் பண்டரிநாதன் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் உழவா் சந்தை வியாபார நேரமான அதிகாலை 3 முதல் 7 மணி வரையில் பல்லடம் சாலையில் இருபுறமும் கடைகள் அமைத்தோ அல்லது வாகனத்தின் மூலமாகவோ காய்கறிகளை விற்பனை செய்யக்கூடாது. அதேபோல, உழவா் சந்தையில் கழிவறை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுப்பதை மேலாளா் உறுதிப்படுத்த வேண்டும். உழவா் சந்தையில் நேரடி விவசாயிகள் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனா். இக் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பேச்சுவாா்த்தையில், திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் கோவிந்தராஜ், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் வழக்குரைஞா் மு.ஈசன், தலைவா் ஆா்.சண்முகசுந்தரம், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மேற்கு மண்டல செயலாளா் ஆா்.பொன்னுசாமி மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com