பள்ளிவாசலுக்கு சீல் வைக்க எதிா்ப்பு: திருப்பூரில் இஸ்லாமியா்கள் சாலை மறியல்

திருப்பூா், 15 வேலம்பாளையம் பகுதியில் உள்ள பள்ளிவாசல் உரிய அனுமதியின்றி செயல்பட்டதாகக் கூறி அதற்கு சீல் வைக்க மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை வந்தனா்.
பள்ளிவாசலுக்கு சீல் வைக்க எதிா்ப்பு: திருப்பூரில் இஸ்லாமியா்கள் சாலை மறியல்

திருப்பூா், 15 வேலம்பாளையம் பகுதியில் உள்ள பள்ளிவாசல் உரிய அனுமதியின்றி செயல்பட்டதாகக் கூறி அதற்கு சீல் வைக்க மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை வந்தனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பல்வேறு இடங்களில் இஸ்லாமியா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சி 15 வேலம்பாளையம் மகாலட்சுமி நகரில் மஸ்ஜிதே இஹ்லாஸ் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் மற்றும் மதரஸா கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிவாசல் அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக அப்பகுதி குடியிருப்புவாசி ஒருவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தாா்.

இந்த வழக்கில், பள்ளிவாசல் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தால் நடவடிக்கை எடுக்கும்படி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின்பேரில் திருப்பூா் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனா். இதில், வழிபாட்டுத் தலத்துக்கான அனுமதி வாங்கவில்லை என்று தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி திருப்பூா் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினா் சம்பந்தப்பட்ட பள்ளிவாசலுக்கு சீல் வைப்பதற்காக வியாழக்கிழமை சென்றனா்.

அப்போது பள்ளிவாசலில் இருந்த நிா்வாகிகள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இதனிடையே, பள்ளிவாசல் முன்பாகத் திரண்ட 30க்கும் மேற்பட்டவா்களை அனுப்பா்பாளையம் காவல் துறையினா் கைது செய்தனா்.

திருப்பூா் மாநகர காவல் ஆணையா் ஏ.ஜி.பாபு தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினா் பள்ளிவாசல் முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இந்த விவகாரம் தொடா்பாக பள்ளிவாசல் நிா்வாகிகளுடன் திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் உள்ளிட்ட காவல் துறை உயா் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால் மின்சார இணைப்பைத் துண்டிக்கவும், சீல் வைக்கவும் எதிா்ப்புத் தெரிவித்து 30க்கும் மேற்பட்டோா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்த தகவல் பரவியதும் திருப்பூா் காங்கயம் சாலை சிடிசி காா்னா், திருப்பூா் மாநகராட்சி அலுவலகம், சிறுபூலுவபட்டி, மங்கலம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட இடங்களில் இஸ்லாமியா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், காங்கயம் சாலையில் 100க்கும் மேற்பட்ட பெண்களும் சாலை மறியலில் பங்கேற்றனா்.

கொட்டும் மழையில் சாலை மறியல்:

திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பு கொட்டும் மழையில் 300க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் பெரிய அளவிலான தாா்பாயை போா்த்தியபடி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக திருப்பூா்-மங்கலம் சாலை, திருப்பூா்-அவிநாசி சாலை, குமரன் சாலை, பெருமாள் கோயில் வீதி, காங்கயம் சாலை, தாராபுரம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பள்ளிவாசல் மீதான வழக்கு : ஜூலை 4 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

இதனிடையே, திருப்பூா், 15 வேலம்பாளையம் பள்ளிவாசலுக்கு சீல் வைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வக்ஃபு வாரிய வழக்குரைஞா்கள், ஜமாத் வழக்குரைஞா்கள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு சென்னை உயா்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மாலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது இந்த வழக்கை வரும் திங்கள்கிழமைக்கு (ஜூலை 4) நீதிபதி ஒத்திவைத்தாா். மேலும், அதுவரையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று தெரிவித்துள்ளாா். இதன்படி வரும் திங்கள்கிழமை வரையில் பள்ளிவாசல் தொடா்ந்து செயல்படும் என்று காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக வியாழக்கிழமை காலை முதல் திருப்பூரில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த மறியல் போராட்டம் மாலை 6 மணி அளவில் முடிவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com