காங்கயம் நகர்மன்ற துணைத் தலைவர் ராஜிநாமா

காங்கயம் நகர்மன்ற துணைத் தலைவர் பதவியை அ.இப்ராகிம் கலிலுல்லா செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார்.
காங்கயம் நகராட்சி அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.வெங்கடேஸ்வரனிடம் பதிவை விலகல் கடிதத்தை அளித்த காங்கயம் நகர்மன்ற துணைத் தலைவர் இப்ராகிம் கலிலுல்லா.
காங்கயம் நகராட்சி அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.வெங்கடேஸ்வரனிடம் பதிவை விலகல் கடிதத்தை அளித்த காங்கயம் நகர்மன்ற துணைத் தலைவர் இப்ராகிம் கலிலுல்லா.

காங்கயம்: காங்கயம் நகர்மன்ற துணைத் தலைவர் பதவியை அ.இப்ராகிம் கலிலுல்லா செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகர்மன்ற துணைத் தலைவர் பதவி திமுக கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, அதன் வேட்பாளராக 16 வது வார்டு வேட்பாளர் ர.கமலவேணி அறிவிக்கப்பட்டிருந்தார்.

ஆனால், நகர்மன்ற துணைத் தலைவர் பதவிக்கு கடந்த வெள்ளிக்கிழமை காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் திமுக கட்சியைச் சேர்ந்த 4 வது வார்டு கவுன்சிலர் அ.இப்ராகிம் கலிலுல்லா, 8 வது வார்டு கவுன்சிலர் கு.வளர்மதி, 16 வது வார்டு கவுன்சிலர் ர.கமலவேணி ஆகியோர் போட்டியிட்டனர். அதிமுக 4 வார்டுகளிலும், சுயேச்சைகள் 3 பேர் வெற்றி பெற்றிருந்த நிலையில், அவர்கள் எவரும் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடவில்லை. திமுகவினர் மட்டுமே போட்டியிட்டனர். மொத்தம் உள்ள 18 வார்டுகளில், 16 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

இதில், அ.இப்ராகிம் கலிலுல்லா 12 வாக்குகள் பெற்று நகர்மன்ற துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கு.வளர்மதி 3 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். கட்சி அறிவித்திருந்த வேட்பாளர் ர.கமலவேணி ஓரே ஒரு வாக்கு மட்டுமே, அதாவது அவரது வாக்கு மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தார்.

இதையடுத்து, திமுக தலைமை அறிவித்திருந்த வேட்பாளருக்குப் பதிலாக வேறு வேட்பாளர் நிறுத்தி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அவர்கள் பதவி விலக வேண்டும் என திமுக தலைமை கடந்த 2 நாள்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. மேலும், கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நகராட்சி/பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுகவினர் போட்டியிட்டு, வெற்றி பெற்றிருந்த இடங்களிலும் பதவி விலக வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

  இந்த நிலையில், திமுக தலைமையின் அறிவிப்புக்கு மாறாக காங்கயம் நகர்மன்ற துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அ.இப்ராகிம் கலிலுல்லா செவ்வாய்க்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதற்கான ராஜிநாமா கடிதத்தை காங்கயம் தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான எஸ்.வெங்கடேஸ்வரனிடம் தனது பதவி விலகல் கடிதத்தை செவ்வாய்க்கிழமை அளித்தார். இதன்போது திமுக மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.

  இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அ.இப்ராகிம் கலிலுல்லா, கட்சியின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு காங்கயம் நகர்மன்ற துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளேன். கவுன்சிலராக இருந்து எனது மக்கள் பணியைத் தொடர்ந்து செய்வேன், என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com