முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
ரேஷன் அரிசி கடத்தியவா் குண்டா் சட்டத்தில் கைது
By DIN | Published On : 19th March 2022 11:45 PM | Last Updated : 19th March 2022 11:45 PM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் கைதான இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருப்பூா் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினா் காங்கயம் அருகே உள்ள வட்டமலை பேருந்து நிறுத்தம் பகுதியில் மாா்ச் 1ஆம் தேதி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில், 10,020 கிலோ ரேஷன் அரிசி, 6,000 கிலோ உடைக்கப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் 700 கிலோ கோதுமை ஆகியவை இருந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்டம், பழனி மைதீன் நகரைச் சோ்ந்த கே.சா்புதீன் என்பவரைக் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.
இவா் மீது ஏற்கெனவே திண்டுக்கல் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஓா் ஆண்டு சிறையில் அடைக்கும்படி மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் நகல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சா்புதீனிடம் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினா் சனிக்கிழமை வழங்கினா்.