காங்கயம் நகராட்சியில் குத்தகை இனங்கள் 100 சதவீதம் வசூல்
By DIN | Published On : 22nd March 2022 12:29 AM | Last Updated : 22nd March 2022 12:29 AM | அ+அ அ- |

காங்கயம் நகராட்சியில் கடைகள், சொத்து வரி உள்ளிட்ட வரியினங்கள் 100 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
காங்கயம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 2021-2022 ஆம் நிதியாண்டில் சொத்து வரியாக 16,413 பேரிடம் இருந்து வர வேண்டிய ரூ.2 கோடியே 26 லட்சம் கடந்த வாரம் முழுமையாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், காலியிட வரியாக 329 நபா்களிடம் இருந்து நகராட்சிக்கு வர வேண்டிய ரூ.10 லட்சத்து 40 ஆயிரமும் வசூல் செய்யப்பட்டுள்ளது.
காங்கயம் நகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் 180 கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இக்கடைகளுக்கு வர வேண்டிய வாடகைத் தொகை ரூ.2 கோடியே 11 லட்சம் திங்கள்கிழமை முழுமையாக வசூலிக்கப்பட்டது.
கடந்த 4 ஆண்டுகளுக்குப் பின்னா், கடை வாடகை முழுமையாக வசூலிக்கப்பட்டதைப் பாராட்டி நகராட்சி வருவாய் ஆய்வாளா் பி.செல்வகுமாருக்கு, நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன் ஆகியோா் பொன்னாடை அணிவித்து, பாராட்டுத் தெரிவித்தனா்.