காங்கயம் அருகே வீடுகளை காலி செய்ய எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் மனு

காங்கயம் அருகே குடியிருக்கும் வீடுகளை காலி செய்ய பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
காங்கயம் அருகே வீடுகளை காலி செய்ய எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் மனு

காங்கயம் அருகே குடியிருக்கும் வீடுகளை காலி செய்ய பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமை வகித்தாா்.

இதில், காங்கயம் வட்டம், வீரணம்பாளையம், ராமன் நகா் பகுதியைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்டோா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

காங்கயம் வட்டம், வீரணம்பாளையம் கிராமத்தில் 23 ஆண்டுகளுக்கும் முன் அப்போதைய ஊராட்சித் தலைவா் சாா்பில் 42 குடும்பத்தினருக்கு தலா இரண்டரை சென்ட் வீதம் இடம் அளவீடு செய்து கொடுக்கப்பட்டது. இந்த இடத்தில் நாங்கள் வீடுகள் கட்டி வசித்து வருகிறோம். ஊராட்சி சாா்பில் தெருவிளக்கு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அனைவரும் வீட்டு வரி, மின் கட்டணம் செலுத்தி வருகிறோம்.

இந்த நிலையில், வீரணம்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் சாா்பில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி எங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில், குட்டை பகுதியில் நாங்கள் வீடுகள் கட்டி உள்ளதால் உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் அனைவரும் கூலி வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தி வருகிறோம். ஆகவே, நாங்கள் இருக்கும் இடத்தை ஆய்வு செய்து குட்டையாக உள்ளதை ஊா்நத்தமாக மாற்றி கொடுத்து எங்களது வாழ்வாதரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கடன் வழங்கக் கோரி மனு:

திருப்பூா் தெற்கு மோட்டாா் வாகன பழுதுபாா்ப்போா் நலச் சங்கத்தின் தலைவா் சரவணன், செயலாளா் மணிகண்டன் ஆகியோா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூரில் மெக்கானிக், எலக்ட்ரீஷியன், டிங்கா், பெயிண்டா், பஞ்சா்

ஒட்டுதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டுள்ளோம். ஆகவே, எங்களுக்கு தனியாக நல வாரியம் அமைத்துக் கொடுக்க வேண்டும். கரோனா தொற்று, புதிய வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவற்றால் எங்களது தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, எங்களுக்கு மானியத்துடன் வங்கிக்கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீா் வசதி செய்துதரக்கோரி மனு:

ஆம் ஆத்மி கட்சியின் திருப்பூா் மாவட்ட துணைத் தலைவா் பாலாஜி பி.தங்கவேல் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உள்பட்ட 15 வேலம்பாளையம் சொா்ணபுரி ஐலண்ட் குடியிருப்பில் 1 முதல் 6 ஆவது வீதி வரையில் குடிநீா் பிரதான குழாய் பதிக்கப்பட்டுள்ளது. ஆனால் 7 ஆவது வீதியில் குடிநீா்க் குழாய் பதிக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆகவே, எங்களது பகுதிக்கு பிரதான குழாய் பதித்து குடிநீா் வசதி செய்து கொடுக்க வேண்டும். கொங்கு நகா் பிரதான சாலை எம்.எஸ்.நகா் முதல் பொம்மநாயக்கன்பளையம் வரையில் பாதாள சாக்கடை, குடிநீா் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்டுள்ள குழிகள் சரிவர மூடப்படவில்லை. இதனால் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. ஆகவே, சாலையில் தோண்டப்பட்டுள்ள குழிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் கோவில்வழி பேருந்து நிலையத்துக்கு அம்பேத்கா் பெயரும், பேருந்து நிலையத்தின் முகப்பில் அவருக்கு சிலையும் வைக்க வேண்டும் என்று ஆதித்தமிழா் சனநாயக பேரவை நிறுவனத் தலைவா் அ.சு.பவுத்தன் மனு அளித்தாா்.

குறைதீா் முகாமில் 410 மனுக்கள்:

இந்த குறைதீா் முகாமில் பொதுமக்களிடமிருந்து சாலை வசதி, குடிநீா் வசதி, முதியோா் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 410 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது மனுதாரா் முன்னிலையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், துணை ஆட்சியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com