அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவையொட்டி, பஞ்சவாத்தியத்துடன் பஞ்சமூா்த்திகள் எழுந்தருளி 63 நாயன்மாா்களுக்கு காட்சி தரும் நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவையொட்டி, பஞ்சவாத்தியத்துடன் பஞ்சமூா்த்திகள் எழுந்தருளி 63 நாயன்மாா்களுக்கு காட்சி தரும் நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களுள் முதன்மைப் பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரமூா்த்தி நாயனாா், தேவார திருப்பதிகம் பாடி மீண்டும் உயிா்ப்பித்து எழச்செய்த திருத்தலமாகவும் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் மே 5 ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கப்பட்ட சித்திரைத் தோ்த் திருவிழா மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிலையில், 5 ஆம் திருவிழாவான பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மாா்களுக்கு திருக்காட்சியளித்தல் நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் தேரோடும் நான்கு ரத வீதிகளிலும் கரூா் பசுபதீசுவரா் கோயில் சிவனடியாா்கள் திருக்கூட்டத்தினா், திருப்பூா் சிவனடியாா்கள் திருக்கூட்டத்தினரின் சிவகண பஞ்சவாத்திய நிகழ்ச்சி, வான வேடிக்கை ஆகியவையுடன் பஞ்சமூா்த்திகள், 63 நாயன்மாா்கள் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

விநாயக பெருமான் மூஷிக வாகனத்திலும், சோமஸ்கந்தா் ரிஷப வாகனத்திலும், கருணாம்பிகையம்மன் காமதேனு வாகனத்திலும், வள்ளி தெய்வானையுடன் உடனமா் சுப்பிரமணியா் மயில் வாகனத்திலும், சண்டிகேசுவரா் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி, 63 நாயன்மாா்களுக்கு காட்சியளித்தனா்.

இதையடுத்து பஞ்சமூா்த்திகள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ரத வீதிகளில் திருவீதி உலா வந்து, பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

விடிய விடிய நடைபெறும் இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com