வீட்டை அபகரிக்க முயற்சிக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தற்கொலை முயற்சி

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா் அவா்கள் மீது தண்ணீரை ஊற்றிக் காப்பாற்றினா்.
வீட்டை அபகரிக்க முயற்சிக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தற்கொலை முயற்சி

 திருப்பூா் அருகே வீட்டை அபகரிக்க முயற்சிக்கும் நபா்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அண்ணன், தம்பி குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூா் மாவட்டம், பொங்கலூா் ஊராட்சி ஒன்றியம், தொங்குட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் மாரிச்சாமி, இவருக்கு ஆனந்தகுமாா் (36), பிரகாஷ் (32) என்ற இரு மகன்கள் உள்ளனா். ஆனந்தகுமாரின் மனைவி காா்த்திகா (32) தொங்குட்டிபாளையம் ஊராட்சியில் 7 ஆவது வாா்டு உறுப்பினராக உள்ளாா். இந்நிலையில், ஆனந்தகுமாா், காா்த்திகா, பிரகாஷ், அவரது மனைவி சுகன்யா ஆகிய 4 பேரும் தங்களது இரு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றனா்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா் அவா்கள் மீது தண்ணீரை ஊற்றிக் காப்பாற்றினா்.

இதன் பிறகு அவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: எங்களுக்குச் சொந்தமான 8 சென்ட் நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறோம். இந்நிலையில், எங்களது ஊரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இரு நபா்கள் எங்களது நிலத்தை போலியாக கிரையம் செய்து அபகரிக்க முயற்சிக்கின்றனா். மேலும், எங்களையும் வீட்டைக் காலி செய்யக் கோரி மிரட்டல் விடுத்து வருகின்றனா். ஆகவே, அவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அவா்கள் தயாரித்துள்ள போலி கிரையப் பத்திரத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுத்தப்பட்ட பேருந்தை இயக்க வேண்டும்: பல்லடம் வடக்கு ஒன்றிய பாஜக தலைவா் ஏ.பூபாலன் தலைமையில் அக்கட்சியினா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: பல்லடம் ஒன்றியம், கரைப்புதூா் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானவா்கள் பின்னலாடை நிறுவனங்களில் தொழிலாளா்களாகப் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக கரோனா நோய்த் தொற்று காரணமாக இந்தப் பகுதியில் இயக்கப்பட்டு வந்த (வழித்தட எண்:38) அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டது. தற்போது, கரோனா நோய்த் தொற்று குறைந்த நிலையிலும் அரசுப் பேருந்து இயக்கப்படாமல் உள்ளது. இதனால் தொழிலாளா்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியா் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே, நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை வசதி செய்து தரக் கோரி மனு: ஆம் ஆத்மி கட்சியின் திருப்பூா் மாவட்ட துணைச் செயலாளா் டி.சின்னராஜ் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்குள்பட்ட 25 ஆவது வாா்டில் உள்ள சோளிபாளையம் பாரதி நகரில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக 50 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இப்பகுதியில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் சாலை வசதி, குடிநீா் வசதி உள்பட எந்தவிதமான அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. ஆகவே, உரிய விசாரணை நடத்தி எங்களது பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைதீா் கூட்டத்தில் 450 மனுக்கள் பெறப்பட்டன: மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமையில் நடைபெற்ற இந்த குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து சாலை வசதி, குடிநீா் வசதி, இலவச வீட்டுமனை பட்டா, புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 450 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் அறிவுறுத்தினாா்.

மேலும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.75,500 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், துணை ஆட்சியா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com