முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
அவிநாசி தோ்த் திருவிழா பாதுகாப்பான முறையில் அன்னதானம் வழங்குவது குறித்து ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 11th May 2022 12:28 AM | Last Updated : 11th May 2022 12:28 AM | அ+அ அ- |

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு திருமண மண்டபங்களில் அன்னதானம் வழங்க உள்ள நிலையில், உணவு பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரைத் தேரோட்டம் மே 12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இத்தேரோட்ட நாள்களில், ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு பல்வேறு அமைப்பினா் சாா்பில், நகரில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களிலும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதையொட்டி, உணவுப் பாதுகாப்பு துறையினா் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அன்னதானம் வழங்கும் திருமண மண்டபங்களை கட்டாயமாக கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். அன்னதானம் தயாரிக்க பேரூராட்சி நிா்வாகத்தின் மூலம் அனுமதி சீட்டு பெற்று, தேவைக்கு ஏற்ப குடிநீா் பெற்று கொள்ளலாம். பாதுகாப்பான முறையில் உணவு தயாரித்து வழங்க வேண்டும். கரோனா அறிகுறிகள், நோய் பாதிக்கப்பட்டவா்களை உணவு சமைக்க, பரிமாற பயன்படுத்தக் கூடாது. தோ் செல்லும் நான்கு ரத வீதிகளைத் தவிர, சேவூா் சாலை வட்டாட்சியா் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கோவை சாலை (பேங்க் ஆப் இந்தியா மேற்புறம்), மங்கலம் சாலை (நந்தவனம்) பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மட்டும் வாகனங்கள் மூலம் உணவு வழங்கலாம். திருமண மண்டபங்களில், தேரோட்டம் நடைபெறும் நேரங்களில் ஆண்கள், பெண்கள் பயன்படுத்த சுகாதாரமான கழிப்பறைகளை அனுமதிக்க வேண்டும். மேலும் பழைய பேருந்து நிலையம் வணிக வளாக காலி இடத்தில் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் என்பன உள்ளிட்ட ஆலோசனைகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டன.
கூட்டத்தில் கோயில் நிா்வாகத்தினா், பேரூராட்சி நிா்வாகத்தினா், பல்வேறு அன்னதானக் குழுவினா் பங்கேற்றனா்.