கந்துவட்டி தொல்லை: அவிநாசி பேரூராட்சி சுகாதார பெண் ஒப்பந்த ஊழியர் தற்கொலை

அவிநாசி பேரூராட்சி சுகாதார பெண் ஒப்பந்த ஊழியர் கந்துவட்டி தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்.
கந்துவட்டி தொல்லை: அவிநாசி பேரூராட்சி சுகாதார பெண் ஒப்பந்த ஊழியர் தற்கொலை

அவிநாசி: அவிநாசி அருகே ராயம்பாளையத்தில், கந்து வட்டி தொல்லையால் மனமுடைந்த பேரூராட்சி ஒப்பந்த சுகாதார பெண் ஊழியர் திங்கள்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவிநாசி அருகே ராயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (35). பனியன் நிறுவனத் தொழிலாளி.  இவரது மனைவி பரிமளா(30). அவிநாசி பேரூராட்சியில் ஒப்பந்த சுகாதார ஊழியராக பணியாற்றி வருகிறார்.  இவர்களுக்கு சுதேசி என்ற மகனும் தேவதர்ஷினி என்ற மகளும் உள்ளனர். 

இந்நிலையில் சந்திரன், அதே பகுதியை சேர்ந்த தனசேகர் என்பவரிடம் கடந்த 4 மாதங்களுக்கு முன் ரூ.27 ஆயிரம் கந்துவட்டிக்கு வாங்கியுள்ளார். வாராந்தோறும் கந்து வட்டி அடிப்படையில் பணம் செலுத்தி வந்துள்ளார். இதற்கிடையில் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். இருப்பினும் தனசேகரன், மீதி ரூ.17 ஆயிரத்தை உடனே தரவேண்டும் எனக் கூறி தகாத வார்த்தைகளால் பேசி, கடந்த சில நாள்களாக தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். 

மேலும், திங்கள்கிழமை சந்திரன் வீட்டில் இல்லாத போது வந்த தனசேகர், அவரது தாயார் பூவாத்தாள் ஆகியோர், வீட்டில் குழந்தைகளுடன் இருந்த பரிமளாவை சாதி பெயரை சொல்லி தகாத வார்த்தைகளில் திட்டி கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.  இதனால் மனமுடைந்த பரிமளா வீட்டுக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  

சிறிது நேரத்திலேயே வீட்டிற்கு வந்த சந்திரன், பரிமளா தூக்கிட்டு கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.  உடனடியாக பரிமளாவை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்த போது பரிமளா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பிறகு குழந்தைகளிடம் விசாரித்த போது தனசேகர், தாயார் பூவாத்தாள் ஆகியோர் வந்து மிரட்டிச் சென்றது தெரியவந்தது.   

இதையடுத்து, கந்துவட்டியால் சாதி பெயர் சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்து, மனைவி தற்கொலைக்கு காரணமான தனசேகர், அவரது தாயார் பூவாத்தாள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சந்திரன் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதைத்தொடர்ந்து அவிநாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவீர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவிநாசியில் கந்து வட்டியால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com