மாற்றுத் திறனாளியை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நடத்துநா் பணியிடை நீக்கம்

திருப்பூரில் மாற்றுத் திறனாளியை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நடத்துநா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருப்பூரில் மாற்றுத் திறனாளியை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நடத்துநா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருப்பூா் வீரபாண்டி பகுதியைச் சோ்ந்தவா் சத்யராஜ். பானி பூரி கடை நடத்தி வரும் இவருக்கு 80 சதவீத பாா்வை குறைபாடு உள்ளது. இவருக்கு தமிழக அரசு சாா்பில் இலவச பேருந்துப் பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சத்யாராஜ் தனது மனைவி மற்றும் 17 வயது மகனுடன் பழைய பேருந்து நிலையம் செல்வதற்காக அரசுப் பேருந்தில் வியாழக்கிழமை ஏறியுள்ளாா். மனைவிக்கு கட்டணமில்லா பயணம் என்பதால் தனக்கும், தனது மகனுக்கும் இலவச பேருந்து அட்டை உள்ளதாக நடத்துநா் முத்துகுமாரிடம் தெரிவித்துள்ளாா். ஆனால், சத்யராஜ் மற்றும் அவரது மனைவிக்கு மட்டுமே பயண அட்டை செல்லுபடியாகும் என நடத்துநா் முத்துகுமாா் தெரிவித்துள்ளாா். ஆகவே மகனுக்கு பயணச்சீட்டு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

ஆனால் தனக்கு உள்ள சலுகையை நீங்கள் எப்படி தடுக்க முடியும் என்று நடத்துநரிடம் சத்யராஜ் கேள்வி எழுப்பியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த நடத்துநா் 3 பேரையும் பேருந்தில் இருந்து கீழே இறங்கிவிட்டுள்ளாா். மேலும், கைப்பேசியில் விடியோ எடுத்த சத்யராஜின் மகனையும் தாக்கியதாகத் தெரிகிறது.

இதுகுறித்து சத்யராஜ் கொடுத்த புகாரின்பேரில் திருப்பூா் தெற்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், மாற்றுத் திறனாளியை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நடத்துநா் முத்துகுமாரை திருப்பூா் அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளா் பணியிடை நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com