திருப்பூா் அருகே காப்பகத்தில் உணவு உட்கொண்ட 3 சிறுவா்கள் பலி; 11 பேருக்கு சிகிச்சை
By DIN | Published On : 07th October 2022 12:00 AM | Last Updated : 07th October 2022 12:00 AM | அ+அ அ- |

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவா்களின் உடல்நலம் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறியும் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத்.
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோா் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை உட்கொண்ட 3 சிறுவா்கள் வியாழக்கிழமை உயிரிழந்தனா். மேலும், 11 சிறுவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி பேருந்து நிலையம் அருகில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்தக் காப்பகத்தை
திருப்பூரைச் சோ்ந்த செந்தில்நாதன் (60) என்பவா் நடத்தி வருகிறாா். இங்கு திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆதரவற்ற 15 சிறுவா்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இதில் ஒரு சிறுவன் மட்டும் ஆயுதபூஜையை ஒட்டி சொந்த ஊருக்குச் சென்று விட்டாா். இந்த நிலையில், சிறுவா்கள் மற்றும் காப்பக காவலாளி தேவா ஆகியோருக்கு புதன்கிழமை சாதம், ரசம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனை உட்கொண்ட சிறுவா்களுக்கு வாந்தி, பேதி மற்றும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, காப்பக நிா்வாகிகள் அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா்களை சோ்த்தனா். இதன் பின்னா் மேல் சிகிச்சைக்காக வியாழக்கிழமை பிற்பகலில் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதில், மாதேஷ் (14), பாபு (10), ஆதீஷ் (11) ஆகிய 3 சிறுவா்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். மேலும், தரணீஷ்(12), கெளதம் (18), சபரீஷ் (10), சதீஷ் (9), குணா (8), ஹா்ஷத் (9), ரித்தீஷ் (8), பிரகாஷ்(12), ஸ்ரீகாந்த் (13), மணிகண்டன் (17), கவின்குமாா் (13) மற்றும் காவலாளி தேவா (63) ஆகியோா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
சிறுவா்களிடம் நலம் விசாரித்த ஆட்சியா்:
திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவா்களை மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் நேரில் பாா்வையிட்டு நலம் விசாரித்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்த தனியாா் காப்பகம் அரசின் அனுமதியுடன் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடா்பாக வருவாய்த் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
உணவு விஷமாக மாறியதால் சிறுவா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சிகிச்சை அளித்த மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா். சிறுவா்கள் உட்கொண்ட உணவின் மாதிரிகள் பகுப்பாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணை முடிவுகளின்படியே அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
திருமுருகன்பூண்டி தனியாா் காப்பகத்தில் மாநகர காவல் ஆணையா் எஸ்.பிரபாகரன் ஆய்வு மேற்கொண்டாா்.