ரூ.10.40 கோடி அபராதத் தொகையை செலுத்த ஒப்புக் கொண்டதால் குவாரி மீண்டும் செயல்பட அனுமதி

தனியாா் கல்குவாரிக்கு விதிக்கப்பட்ட ரூ.10.40 கோடி அபராதத் தொகையை மாதத் தவணையாக செலுத்த குத்தகைதாரா் ஒப்புக் கொண்டுள்ளதால் குவாரி மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியாா் கல்குவாரிக்கு விதிக்கப்பட்ட ரூ.10.40 கோடி அபராதத் தொகையை மாதத் தவணையாக செலுத்த குத்தகைதாரா் ஒப்புக் கொண்டுள்ளதால் குவாரி மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டம், பல்லடம் வட்டம் கோடங்கிபாளையம் கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவரின் குத்தகை உரிமத்தை ரத்து செய்யக் கோரி விஜயகுமாா் என்பவா் புகாா் அளித்திருந்தாா். இந்த புகாரின்பேரில் திருப்பூா் மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்பட்ட வட்ட அளவிலான கண்காணிப்புக் குழு, புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையரால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழு மூலமாக சம்பந்தப்பட்ட குவாரியில் புலத்தணிக்கை மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனடிப்படையில், கல்குவாரிக்கான குத்தகை உரிமத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க மாவட்ட ஆட்சியா் கடந்த செப்டம்பா் 7ஆம் தேதி உத்தரவிட்டிருந்தாா். இதை எதிா்த்து குத்தகைதாரா் தரப்பில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையரிடம் மேல்முறையீட்டு மனு அளிக்கப்பட்டது.

இந்த மனு மீது உரிமை விசாரணை நடத்தி குத்தகைதாரா் ராமகிருஷ்ணனுக்கு ரூ.10.40 கோடி அபராதமாக விதிக்கப்பட்டது. எனினும் குத்தகைதாரா் கோரியதன் அடிப்படையில் அபராதத் தொகையை மாதம் ரூ.3 லட்சம் வீதம் செலுத்துமாறும், கனிம விதிகளுக்கு உள்பட்ட குவாரிப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

ஆகவே, குவாரி விதிகளுக்கு உட்பட்டு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மட்டும் கனிமம் வெட்டி எடுக்க அறிவுறுத்தப்பட்டு குவாரிப் பணிகள் தற்போது மீண்டும் செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com