திருப்பூா் மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டம்
By DIN | Published On : 17th September 2022 05:04 AM | Last Updated : 17th September 2022 05:04 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தனா்.
திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியம் என்.காஞ்சிபுரம் மற்றும் ஜோதியம்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளிகளில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் நடைபெற்ற முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
தாராபுரம் வட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 77 அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலமாக 1,429 மாணவ, மாணவிகள் பயனடையவா். தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மூலம் காலை சிற்றுண்டிகள் வழங்கப்படும் என்றாா்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத், திருப்பூா் மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், தாராபுரம் வட்டாட்சியா் குமரேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.