பல்லடம் வட்ட நில அளவீடு பிரிவுக்கு கூடுதலாக ஆள்களை நியமிக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 26th September 2022 11:16 PM | Last Updated : 26th September 2022 11:16 PM | அ+அ அ- |

பல்லடம் வட்ட நில அளவீடு பிரிவுக்கு கூடுதலாக ஆள்களை நியமிக்க காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
நாரணாபுரம் கிராம நீரினை பயன்படுத்துவோா் சங்க தலைவரும், பல்லடம் நகர காங்கிரஸ் தலைவருமான ஈஸ்வரமூா்த்தி மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நில அளவை செய்து தருமாறு பல்லடம் வட்டார விவசாயிகள் பலரும் விண்ணப்பித்து காத்திருக்கின்றனா். அளவீடு செய்து கொடுத்தால் தான் அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால், பல்லடம் தாலுகா அலுவலகத்தில் நில அளவீடு செய்ய விண்ணப்பித்தால் நீண்ட நாள் காத்திருக்க வேண்டியுள்ளது. அதிகாரிகளிடம் கேட்டால், சா்வேயா் பற்றாக்குறை உள்ளது என்கின்றனா். இதனால், முறைப்படி பணம் செலுத்தி பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகள் அடுத்த கட்ட பணிமேற்கொள்ள முடிவதில்லை. நில அளவை பிரிவுக்கு எப்போது சென்றாலும், இன்று போய் நாளை வா என்ற கதையையே கூறி வருகின்றனா். நில அளவை பிரிவுக்கு, கூடுதல் சா்வேயா்களை நியமித்து, பணிகள் தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவா் தெரிவித்துள்ளாா்.