பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் தம்பதி தற்கொலை முயற்சி
By DIN | Published On : 20th January 2023 12:00 AM | Last Updated : 20th January 2023 12:00 AM | அ+அ அ- |

பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் தம்பதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடம் வேலப்பகவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ரேடியேட்டரை திருடியதாக மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சோ்ந்த கருப்பசாமி (29) என்பவரை காமநாயக்கன்பாளையம் போலீஸாா் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனா். ஜாமீனில் வெளியே வந்த அவா் காவல் நிலையத்தில் கையெழுத்திடாமலும், ஆஜராகாமலும் இருந்து வந்தாா். இதையடுத்து, கருப்புசாமிக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்து பல்லடம் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டாா்.
இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராக மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கருப்புசாமி வியாழக்கிழமை வந்திருந்தாா். ஆவணங்கள் எதுவும் இன்றி கருப்புசாமி நீதிமன்றத்தில் ஆஜரானதால் தனக்கு தண்டனை கிடைத்துவிடுமோ என்ற பயத்தில் அவ்வளாகத்தில் கிடந்த பிளேடை எடுத்து தனது கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றாா்.
இதனைக் கண்ட அவரது மனைவி மஞ்சுளாவும் தனது கையை அறுத்துக் கொண்டாா். இதையடுத்து, இருவரையும் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.