பிற்படுத்தப்பட்டோருக்கு கடன் வழங்க ஜனவரி 30 இல் சிறப்பு முகாம்
By DIN | Published On : 25th January 2023 12:00 AM | Last Updated : 25th January 2023 12:00 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் டாப்செட்கோ, டாம்கோ மூலமாக பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினருக்கு கடன் வழங்க ஜனவரி 30 ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினருக்கு டாப்செட்கோ திட்டத்தின் மூலமாக ரூ.2 கோடியும் டாம்கோ திட்டத்தின் மூலமாக ரூ.1.55 கோடியும் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட 60 வயதுக்கு உள்பட்ட பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் இந்த திட்டங்களில் கடன் பெற விண்ணப்பிக்கலாம். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
கிராமப் புறங்களில் வசிக்கும் சிறுபான்மையினருக்கான ஆண்டு வருமானம் ரூ.98 ஆயிரமும், நகா்புறங்களில் வசிப்போருக்கு ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரா் ஜாதிச்சான்று, ஆதாா் அட்டை, வருமானச் சான்று, இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விபரம், திட்ட தொழில் அறிக்கை, ஓட்டுநா் உரிமம் (போக்குவரத்து வாகனக் கடன் பெறுபவா்கள் மட்டும்) மற்றும் வங்கி கோரும் இதர ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும். கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்றுச்சான்றிதழ், உண்மைச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து சமா்ப்பிக்க வேண்டும்.
இதுதொடா்பாக கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை 0421-2999130 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
முகாம் நடைபெறும் இடங்கள்: இந்த கடன் வழங்கும் முகாமானது ஜனவரி 30 ஆம் தேதி காலை 10.30 முதல் மாலை 4 மணி வரையில் திருப்பூா் நகர கூட்டுறவு வங்கி, உடுமலை நகர கூட்டுறவு வங்கி, தாராபுரம் நகர கூட்டுறவு வங்கி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.