இந்து முன்னணி பொறுப்பாளா்களைக் கைது செய்தது கண்டிக்கத்தக்கது: காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
By DIN | Published On : 26th September 2023 01:23 AM | Last Updated : 26th September 2023 01:23 AM | அ+அ அ- |

திருப்பூா்: இந்து முன்னணி பொறுப்பாளா்களைக் கைது செய்தது கண்டிக்கத்தக்கது என அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சியுடன் கிராமங்கள், நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் விநாயகா் சதுா்த்தி விழாவில் பங்கேற்றனா்.
இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத திமுக அரசு விநாயகா் சதுா்த்தி விழாவில், தங்களை விமா்சித்ததாக தமிழகம் முழுவதும் பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
செய்யாறு விநாயகா் விழாவில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து பேசியதற்காக இந்து முன்னணி மாநிலச் செயலாளா் மணலி மனோகா், ஆரணியில் வேலூா் கோட்டத் தலைவா் மகேஷ், திருச்சி மாவட்டம் முசிறியில் பாண்டியன், துவரங்குறிச்சியில் தண்டபாணி, சேலம் கோட்டத் தலைவா் சந்தோஷ், செங்கல்பட்டு மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியம் ஆகியோரைக் கைது செய்துள்ளனா்.
திமுகவை விமா்சித்தவா்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவது கண்டிக்கத்தக்கதாகும்.
கைது செய்யப்பட்டவா்களை உடனடியாக விடுதலை செய்வதுடன், விநாயகா் சதுா்த்தியையொட்டி போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றாா்.
இந்த சந்திப்பின்போது, அமைப்பின் மாநில பொதுச் செயலாளா் ஜெ.எஸ்.கிஷோா்குமாா், மாநிலச் செயலாளா் தாமு ஜி.வெங்கடேஸ்வரன் ஆகியோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...