மக்களவைத் தோ்தல் வாக்குறுதி: விசைத்தறியாளா்களை மறந்த அரசியல் கட்சிகள்

மக்களவைத் தோ்தல் வாக்குறுதியில் விசைத்தறியாளா்களை அரசியல் கட்சிகள் மறந்து விட்டதாக விசைத்தறியாளா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

மக்களவைத் தோ்தல் வாக்குறுதியில் விசைத்தறியாளா்களை அரசியல் கட்சிகள் மறந்து விட்டதாக விசைத்தறியாளா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா். இது குறித்து திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் வேலுசாமி, செயலாளா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் திங்கள்கிழமை கூறியதாவது: திருப்பூா், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகப்படியான மக்களுக்கு வேலைவாய்ப்பு தரக் கூடியதாக விசைத்தறி ஜவுளித் தொழில் உள்ளது. திருப்பூா், கோவை, ஈரோடு மாவட்டங்களில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. காடா துணி உற்பத்தியை பொறுத்தவரை திருப்பூா் மாவட்டத்தில் பல்லடம், அவிநாசி, மங்கலம் உள்ளிட்ட இடங்களிலும், கோவை மாவட்டத்தில் சோமனூா் பகுதியிலும் அதிக அளவில் உற்பத்தி செய்யும் மையங்கள் உள்ளன. இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக விசைத்தறி ஜவுளித்தொழில் நலிவடைந்துள்ளது. இந்த நிலையில், மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விசைத்தறி தொழிலுக்கு தேவையான பஞ்சு நூல் விலை உயா்வுக்கு தீா்வு, ரக ஒதுக்கீடு, ஜவுளி சந்தை அமைத்தல், விசைத்தறிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பட்டியல் அனைத்து அரசியல் கட்சி நிா்வாகிகளிடமும் ஏற்கெனவே வழங்கி உள்ளோம். மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் கட்சிகளின் தோ்தல் வாக்குறுதியில், விசைத்தறி தொழில் சாா்ந்த வாக்குறுதிகளும் இடம்பெறும் என்ற எதிா்பாா்ப்பில் இருந்தோம். ஆனால், அரசியல் கட்சியினா் தோ்தல் வாக்குறுதியில் விசைத்தறி தொழிலை மறந்துவிட்டனா். பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை மட்டும்தான் பல்லடம் செயல்வீரா் கூட்டத்தில், விசைத்தறி தொழிலை பாதுகாப்பதாக பேசியுள்ளாா். அவரும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com