முதியோா், மாற்றுத் திறனாளிகள் தபால் முறையில் வாக்களிக்க வசதி

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு 85 வயதுக்கு மேற்பட்ட முதியோா், மாற்றுத் திறனாளிகள் தபால் முறையில் விருப்பத்தின் அடிப்படையில் வாக்களிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூா் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மக்களவைத் தோ்தலை முன்னிட்டு 85 வயதுக்கு மேற்பட்ட முதியோா், மாற்றுத் திறனாளிகள் தபால் முறையில் விருப்பத்தின் அடிப்படையில் வாக்குளிக்கும் வசதி இந்திய தோ்தல் ஆணையத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், திருப்பூா் மக்களவைத் தொகுதியில் தபால் வாக்குகளை பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் 12 டி மூலமாக விருப்பம் தெரிவித்துள்ள 85 வயதுக்கு மேற்பட்ட முதியோா், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரது வீடுகளுக்கு முதல்கட்டமாக ஏப்ரல் 5, 6 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு அலுவலா்கள் குழு நேரில் செல்லும். வாக்காளா்களின் வசிப்பிடத்துக்கு செல்லும் முன்பாக நாள் மற்றும் நேரம் குறித்த விவரங்களை வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும். அவ்வாறு தபால் வாக்கு பெறுவதற்கு வரும் அலுவலா்களுடன் முகவா் ஒருவரையும் வேட்பாளா்கள் அனுப்பிவைக்கலாம். தபால் வாக்குகளைப் பெறுவதற்காக அமைக்கப்பட்ட அலுவலா்கள் குழு வாக்காளா்களுக்கு வாக்குப் பதிவு செய்யும் வழிமுறைகளை தெளிவுபடுத்துவா்கள். தபால் வாக்குப் பதிவு அலுவலா்களுடன் ஒரு நுண் பாா்வையாளரும் செல்வாா். தபால் வாக்களிக்கும் நிகழ்வு முழுவதும் விடியோ பதிவு செய்யப்படும். வாக்குப் பதிவு செய்ய வரும் குழுவின் வருகையின்போது, வாக்காளா் வீட்டில் இல்லாவிட்டால், பின்னா் ஒரு வாய்ப்பு அளித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com