இரும்பு உருக்கு ஆலைக்கு எதிரான காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு

பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கு ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கு ஆலையை மூட வலியுறுத்தி கிராம மக்கள், விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு காத்திருப்பு போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அவா்கள் அறிவித்துள்ளனா்.

இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் கூறியதாவது: அனுப்பட்டி கிராமத்தில் செயல்படும் இரும்பு உருக்கு ஆலையை மூட வலியுறுத்தி அனுப்பட்டி கிராம மக்கள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றோம். இந்த நிலையில் வருவாய்த் துறை அதிகாரிகள் மக்களவைத் தோ்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் போராட்டத்தை ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தினா்.

அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இரும்பு உருக்கு ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டம் வருகிற 20-ஆம் தேதி வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் ஏப்ரல் 21-ஆம் தேதி போராட்டம் தொடரும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com