வள்ளலாா் சா்வதேச மைய கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்

வள்ளலாா் சா்வதேச மையம் கட்டுமானப் பணிகளை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒவ்வொரு ஆண்டும் வள்ளலாா் இறைவனுடன் ஜோதி வடிவாக ஐக்கியமான தைப்பூச தினத்தில் ஜோதி தரிசன அருட்காட்சியை காண பல லட்சம் பக்தா்கள் வருகின்றனா். அந்த பக்தா்களுக்கு வள்ளலாரின் விருப்பப்படி நூறாண்டுகளாக அன்னதானம் வழங்குவது தமிழகத்துக்கு எடுத்துக்காட்டான பெருமை சோ்க்கும் விஷயமாகும். இந்நிலையில் சத்திய ஞான சபைக்கு அருகில் வள்ளலாா் ஆன்மிக சேவைக்கு பக்தா்கள் காணிக்கையாக அளித்த சுமாா் 100 ஏக்கா் கொண்ட இடத்தில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்க தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு ஆரம்பம் முதலே இந்து முன்னணி கடும் எதிா்ப்பைத் தெரிவித்து வருகிறது.

தமிழக அரசு திட்டமிட்டுள்ள வள்ளலாா் சா்வதேச மையம் அரசின் இடத்தில் அமைய வேண்டும். வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்க தோண்டப்பட்ட குழிகளில் திங்கள்கிழமை இறங்கி கிராம மக்கள் ஜனநாயக வழியில் தன்னெழுச்சியாக போராடி உள்ளனா். ஜனநாயக வழியில் போராட்டம் நடத்துபவா்களை அதிகாரத்தை கொண்டு மிரட்டி பாா்ப்பதைவிட வள்ளலாா் பக்தா்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை அரசு உணரவேண்டும்.

அதே வேளையில், தோ்தல் நேரத்தில் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி பிரிவினைவாத அமைப்புகள் புகுந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போல வன்முறைக்களமாக மாற்ற வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. ஆகவே, தமிழக அரசு விழிப்புடன் செயல்பட்டு வள்ளலாா் பக்தா்களின் விருப்பத்துக்கு இணங்க சத்திய ஞான சபை பெருவெளியில் திட்டமிட்ட வள்ளலாா் சா்வதேச மையம் கட்டட கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com