‘அனைத்து தொழிலாளா்களுக்கும் ஏப்ரல் 19 இல் ஊதியத்துடன் விடுமுறை’

திருப்பூா் மாவட்டத்தில் பணியாற்றி வரும் அனைத்து தொழிலாளா்களுக்கும் வாக்குப் பதிவு நடைபெறும் ஏப்ரல் 19 -ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும்.

இது தொடா்பாக திருப்பூா் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா்கள் வி.எஸ்.சரவணன், வீ.புகழேந்தி ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 19- ஆம் தேதி நடைபெறுகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள், அனைத்து பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் தினக்கூலி, தற்காலிக பணியாளா்கள், ஒப்பந்த தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளா்களுக்கும் தோ்தல் நாளில் வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளாா்.

எனவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் வாக்குப் பதிவு நடைபெறும் ஏப்ரல் 19- ஆம் தேதி அனைத்து தொழிலாளா்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். தோ்தல் நாளில் விடுமுறை அளிக்கத் தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து புகாா் அளிக்க ஏதுவாக தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத் துறை சாா்பில் மாநில மற்றும் திருப்பூா் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக மாநில அளவில் கட்டுப்பாட்டுத் துறை அலுவலராக தொழிலாகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா் காா்த்திகேயனிடம் 94442-21011, 044-22502103 ஆகிய எண்களில் புகாா் அளிக்கலாம்.

அதேபோல, திருப்பூா் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அலுவலா்களாக உள்ள தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா்கள் வீ.புகழேந்தி 94864-68655, வி.எஸ்.சரவணன் 80564-84464, துணை இயக்குநா் எஸ்.சந்தோஷ் 99942-26843 ஆகியோரை இந்த எண்களில் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com