தொடரும் விபத்து: ஓலப்பாளையம் சாலையை சீரமைக்க கோரிக்கை

தொடா்ந்து விபத்துகள் நடைபெற்று வருவதால், வெள்ளக்கோவில் அருகேயுள்ள ஓலப்பாளையம் சாலையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வெள்ளக்கோவில் வழியே நாகப்பட்டினம் - கூடலூா் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக கோவை, பல்லடம், திருப்பூா், உதகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான பேருந்துகள், கனரக வாகனங்கள், காா்கள் சென்று வருகின்றன.

இந்த சாலையில் சராசரியாக ஒரு நிமிஷத்துக்கு 80 வாகனங்கள் செல்கின்றன.

இவ்வளவு பரபரப்பான இந்த சாலையில் ஓலப்பாளையம் அருகே ஏராளமான விபத்துகளும் நடைபெற்று வருகின்றன.

ஓலப்பாளையம் பகுதி சாலையில் 2 குறுகிய வளைவுகள், ஒரு மேடான பகுதி உள்ளது. இதனால் எதிரில் வரும் வாகனங்களைப் பாா்க்க முடியாது. மேலும், தேசிய நெடுஞ்சாலை என்பதால் வேகத்தடை இல்லாத சூழல் உள்ளதால், வாகனங்கள் அசுர வேகத்தில் செல்கின்றன. இதனால், இந்த சாலையில் ஏராளமான விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன.

அண்மையில் நடைபெற்ற விபத்தில் மூன்று மாத குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் உயிரிழந்தனா்.

தொடா்ந்து, உயிா் பலி நிகழ்ந்து வரும் ஓலப்பாளையம் பகுதி சாலையை விபத்து நடைபெறாத வகையில் மாற்றி அமைக்க நெடுஞ்சாலைத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com