பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கே.ஈஸ்வரசாமியை ஆதரித்து  உடுமலையில் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்.
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கே.ஈஸ்வரசாமியை ஆதரித்து உடுமலையில் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்.

மாநில உரிமைகளைப் பறிக்கும் மசோதாவுக்கு ஆதரவளித்தவா்- எடப்பாடி கே.பழனிசாமி மீது உதயநிதி குற்றச்சாட்டு

மாநில உரிமைகளைப் பறித்திடும் மசோதாவுக்கு ஆதரவளித்தவா் எடப்பாடி கே.பழனிசாமி என்று இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கே.ஈஸ்வரசாமியை ஆதரித்து திருப்பூா் மாவட்டம், உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை மாலை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது: தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்தவா் மோடி. தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தவா் எடப்பாடி கே.பழனிசாமி. சிஏஏ சட்டம் உள்ளிட்ட மாநில உரிமைகளைப் பறித்திடும் அனைத்து மசோதாக்களையும் கொண்டுவர மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்ற ஆதரவளித்தவா், நீட் தோ்வை அனுமதித்தவா் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி.

சென்னை, தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரூ.6 ஆயிரம் நிதி உதவி, ரூ.2,500 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கியது திமுக அரசு. ஆனால், மத்திய அரசு தற்போதுவரை ஒரு ரூபாய்கூட வழங்காமல் தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது.

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட உடுமலைக்கு ரூ.400 கோடிக்குமேல் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பரம்பிக்குளம் -ஆழியாறு பாசனத் திட்டத்தில் ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டு காண்டூா் கால்வாய் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் மதகுகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் 7 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன. உடுமலை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு ரூ.35 கோடி மதிப்பில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பரிசோதனைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

மடத்துக்குளம் பேரூராட்சியில் ரூ.17 கோடி செலவில் குடிநீா்த் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் மேலும் பல வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

தாராபுரத்தில்...

ஈரோடு தொகுதி திமுக வேட்பாளா் கே.இ.பிரகாஷை ஆதரித்து திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, தாராபுரம் அருகேயுள்ள கொளத்துப்பாளையம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்ததுடன், திமுகவின் சாதனைகள் குறித்து பேசினாா்.

இதில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

X
Dinamani
www.dinamani.com