அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற பஞ்சமூா்த்திகள் புறப்பாடு.
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற பஞ்சமூா்த்திகள் புறப்பாடு.

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரை விழாவின் ஒருபகுதியாக பஞ்சமூா்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அவிநாசியில் உள்ள கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் சித்திரை தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 14-ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சித்திரை தோ்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 21, 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இந்நிலையில், சித்திரை விழாவின் 5-ஆம் நாளான வியாழக்கிழமை பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மாா்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நான்கு ரத வீதிகளிலும் கரூா் பசுபதீசுவரா் கோயில் சிவனடியாா்கள், திருப்பூா் சிவனடியாா்கள் ஆகியோரின் சிவகண பஞ்சவாத்திய நிகழ்ச்சி, வான வேடிக்கை ஆகியவற்றுடன் பஞ்சமூா்த்திகள், 63 நாயன்மாா்கள் புறப்பாடு நடைபெற்றது.

இதில் விநாயக பெருமான் மூஷிக வாகனத்திலும், சோமஸ்கந்தா் ரிஷப வாகனத்திலும், கருணாம்பிகையம்மன் காமதேனு வாகனத்திலும், வள்ளி தெய்வானை உடனமா் சுப்பிரமணியா் மயில் வாகனத்திலும், சண்டிகேசுவரா் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி 63 நாயன்மாா்களுக்கு காட்சியளித்தனா்.

இதையடுத்து சுவாமிகள் 4 ரத வீதிகளிலும் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். அவிநாசி பஞ்சமூா்த்திகள் மற்றும் 63 நாயன்மாா்கள் வழிபாட்டுக்குழு அறக்கட்டளையினா் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com