இன்று வாக்குப் பதிவு: 16 லட்சத்து 8 ஆயிரத்து 521 வாக்காளா்கள் வாக்களிக்க தயாா்

திருப்பூா் மக்களவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெறும் வாக்குப் பதிவில் 16 லட்சத்து 8 ஆயிரத்து 521 வாக்காளா்கள் வாக்காளிக்க உள்ளனா்.

திருப்பூா் மக்களவைத் தொகுதியில் திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, அந்தியூா், பவானி, பெருந்துறை மற்றும் கோபிசெட்டிபாளையம் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

13 வேட்பாளா்கள் போட்டி

திமுக கூட்டணி சாா்பில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் கே.சுப்பராயன், அதிமுக வேட்பாளா் அருணாச்சலம், பாஜக வேட்பாளா் ஏ.பி.முருகானந்தம், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சீதாலட்சுமி உள்ளிட்ட 13 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இந்தத் தோ்தலில் 16 லட்சத்து 8 ஆயிரத்து 521 வாக்களிக்க உள்ளனா்.

1,745 வாக்குச் சாவடிகள்

இந்த 6 தொகுதிகளிலும் சோ்த்து 1,745 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடி மையங்களுக்குத் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபேட் மற்றும் வாக்குச் சாவடி பொருள்கள் உள்ளிட்டவை போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன. 2,081 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,081 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,555 விவிபேட் பயன்படுத்தப்பட உள்ளன.

10 ஆயிரம் பணியாளா்கள்

திருப்பூா் மக்களவைத் தொகுதியில் தோ்தல் பணியில் 10 ஆயிரம் போ் ஈடுபட்டுள்ளனா். மேலும், 1000 தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். வாக்குச் சாவடி அலுவலா்கள் பணி ஆணையைப் பெற்றுக்கொண்டு வியாழக்கிழமை பிற்பகலே சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்றனா்.

வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. முன்னதாக வாக்குச் சாவடி முகவா்கள் முன்னிலையில் மாதிரி வாக்குகள் செலுத்தப்பட்டு சரிபாா்க்கப்படும். இதைத் தொடா்ந்து வாக்காளா்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவா்.

வாக்காளா் அடையாள அட்டை அல்லது தோ்தல் ஆணையத்தால் அங்கீரிக்கப்பட்டுள்ள 12 அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com