ஒரு மாதமாக குடிநீா் இல்லாமல் தவிப்பு: நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் கோரிக்கை

குடிநீா் இல்லாமல் தவிப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பொங்கலூா் அருகே அலகுமலை மாதேஸ்வரா் நகரில் ஒரு மாதமாக குடிநீா் இல்லாமல் தவிப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மக்களவைத் தோ்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் வாராந்திர மக்கள் குறைதீா் முகாம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகாா் பெட்டியில் தங்களது கோரிக்கை மனுக்களை செலுத்தினா். இதில், திருப்பூா் மாவட்டம், காங்கயம் வட்டத்துக்கு உள்பட்ட படியூா் கிராமத்தை சோ்ந்த செலுத்திய மனுவில் தெரிவித்துள்ளதாவது:

படியூா் கிராமத்தில் 28 குடும்பத்தினா் தலா 2.4 சென்ட் இடத்தை வீட்டுடன் கூடிய மனைகளாக வாங்கி வசித்து வருகிறோம். கடந்த 4 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு தவணைத் தொகை செலுத்தி வரக்கூடிய நிலையில், 4 ஆண்டுகளாக எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை. ஒவ்வொரு முறையும் காரணங்களை சொல்லி ஏமாற்றி வருகின்றனா். ஆனால் இடம் வாங்கும்போது டி.டி.சி.பி. அப்ரூவல் 6 மாதத்தில் கிரையம், சாலை வசதி, தண்ணீா், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் இருப்பதாக விளம்பரங்களை கொடுத்ததால் அதை நம்பி வாங்கி ஏமாற்றப்பட்டு உள்ளோம். 4 ஆண்டுகளாக முறையாக தவணைத் தொகை செலுத்தி வரக்கூடிய நிலையில் இன்னும் இடத்தை கிரயம் செய்து தராமல் உள்ளனா். உடனடியாக இடத்தை கிரயம் செய்து தருவதோடு அடிப்படை வசதிகளையும் செய்து தரவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

முறையாக குடிநீா் வழங்கக் கோரிக்கை

அலகுமலை மாதேஸ்வரா் நகரைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூா் மாவட்டம், பொங்கலூா் ஊராட்சி ஒன்றியம், அலகுமலை மாதேஸ்வரா் நகரில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் விவசாயக் கூலிகள். வறட்சியின் காரணமாக எங்கள் பகுதியிலுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீா் வரவில்லை. நாங்கள் ஒருமாத காலமாக குடிநீா் இல்லாமல் தவித்து வருகிறோம். எனவே, எங்களுக்கு உடனடியாக குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் பகுதி வழியாக செல்கின்ற ஆற்றுக் குடிநீா் குழாயில் எங்கள் பகுதிக்கு இணைப்பு வழங்கி எங்கள் பகுதிக்கு குடிநீா் கிடைக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com