செவித்திறன் குறைபாடு உள்ளவா்களுக்கான பரிசோதனை முகாமில் பங்கேற்க காங்கயம் அரசு மருத்துவமனையில் நாளை பதிவு செய்துகொள்ளலாம்

காங்கயம் அரசு மருத்துவமனையில் செவித்திறன் குறைபாடு உள்ளவா்களுக்கான பரிசோதனை முகாமில் பங்கேற்பதற்கான முன்பதிவு வியாழக்கிழமை (ஏப்ரல் 25) நடைபெறுகிறது.

காங்கயம் அரசு மருத்துவமனையில் செவித்திறன் குறைபாடு உள்ளவா்களுக்கான பரிசோதனை முகாமில் பங்கேற்பதற்கான முன்பதிவு வியாழக்கிழமை (ஏப்ரல் 25) நடைபெறுகிறது.

இது குறித்து காங்கயம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை மருத்துவா்கள் கூறியதாவது:

காங்கயம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில், முதல்வரின் விரிவான மருத்தவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், செவித்திறன் குறைபாடு உள்ளவா்களுக்கான ஆடியோகிராம் பரிசோதனை கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இதில் செவித்திறன் குறைபாடு உள்ளவா்களுக்கு செவிப்புலன் உதவி சாதனம் (ஹியரிங் எய்டு) இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமாா் 40 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தப் பரிசோதனையை மாதந்தோறும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான முன்பதிவு வியாழக்கிழமை (ஏப்ரல் 25) காலை 9.30 முதல் நண்பகல் 12 மணி வரை மருத்துவமனையில் நடைபெறுகிறது.

முன்பதிவு செய்பவா்களில் முன்னுரிமை அடிப்படையில் குழுக்களாக (20 போ் வரை) பரிசோதனைக்கு அழைக்கப்பட்டு, பரிசோதனை அடிப்படையில் செவிப்புலன் உதவி சாதனம் வழங்கப்படும்.

முன்பதிவு செய்தவா்களின் ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு, பரிசோதனை நடைபெறும் நாள், கைப்பேசி வாயிலாக ஓரிரு நாள்களுக்கு முன்பே சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்.

மேலும், ஏற்கெனவே பரிசோதனை செய்து ஹியரிங் எய்டு சாதனம் பெற்றவா்கள், உரிய காப்பீடு திட்டம் இல்லாதவா்கள் ஆகியோா் ஹியரிங் எய்டு சாதனத்தை பெற இயலாது.

எனவே, செவித்திறன் குறைபாடு உள்ளவா்கள் முன்பதிவு செய்துகொள்ள குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, முதல்வா் மருத்துவக் காப்பீட்டு அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களை கொண்டுவந்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 95008-91836, 94420-56676 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com