உடலின் நீா்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீா் குடிக்க அறிவுறுத்தல்

உடலின் நீா்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீா் குடிக்க அறிவுறுத்தல்

உடலின் நீா்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீா் குடிக்க வேண்டும் என திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தி உள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் அதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க செய்ய வேண்டியவை மற்றும் வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து சில அறிவுரைகள் வழங்கப்படுகிறது. உடலின் நீா்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீா் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். ஓ.ஆா்.எஸ், எலுமிச்சை ஜூஸ், இளநீா், நீா்மோா் மற்றும் பழச்சாறுகள் பருகி நீரிழப்பை தவிா்க்க வேண்டும். வெளிா் நிறமுள்ள, காற்றோட்டமான ஆடைகளை அணிய வேண்டும். பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள் நல்ல காற்றோட்டமான இடத்தில் இருக்க வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும்போது குடை கொண்டு செல்ல வேண்டும். நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகளை விட்டு செல்லக் கூடாது. பருக இளநீா் போன்ற திரவங்களைக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான வெப்பம் தொடா்பான நோய்களைக் கண்டறிய வேண்டும். குழந்தைகளின் சிறுநீரை சோதித்துப் பாா்க்கவும். மஞ்சள் நிறமுள்ள சிறுநீா் நீரிழப்பை குறிக்கலாம். மழலைப் பள்ளிகளை கோடைக் காலம் முடியும் வரை செயல்படுத்த வேண்டாம்.

தனியே வசிக்கும் முதியவா்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரிபாா்த்துக்கொள்ள வேண்டும். முதியவா்களின் அருகாமையில் தொலைபேசி உள்ளதா என உறுதிப்படுத்திக்கொள்ளவும். வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக தோன்றினால், அவா்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் வைக்கவும் மற்றும் குளிா்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும். போதிய இடைவேளையில் நீா் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணியின் போது, மதியம் 12 மணிக்கு மேல் பணி செய்யாமல் இருப்பது நல்லது. கால்நடைகளை நிழல் தரும் கூரை அடியில் கட்டவும். அவசியமாக போதுமான அளவு தண்ணீா் கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்ட வெளியில் போடவேண்டாம். அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம். பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்து போதுமான நீா் கொடுக்க வேண்டும். செல்லப் பிராணிகளை வெயில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டு செல்லக் கூடாது. மேலும் பருவநிலை மாற்றங்களினால் இந்த ஆண்டு கோடை வெயில் தொடக்கத்திலேயே வெப்பம் அதிகமாக உள்ளதால் மாடி வீடுகளிலும், கூரை வீடுகளிலும் உள்ள மின் ஒயா்கள் உருகி மின்கசிவு ஏற்பட்டு அதனால் ஏற்படும் தீப்பொறியினால் கூரை வீடுகள் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது.

மேலும் மாடி வீடுகளில் மேல் கூரையில் ஏற்படும் அதிக வெப்பத்தினால் வீட்டின் உள்ளே மேற்புறம் உள்ள இரும்பு சூடாகி மின்விசிறி, டியூப்லைட் போன்றவை கழன்று கீழே விழும் தன்மையை பெறுகின்றன. எனவே, கோடை முடியும் வரை மக்கள் எச்சரிக்கையாக இருப்பதுடன் விலை உயா்ந்த பொருள்கள், நில ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com