மின்வாரிய  அலுவலகத்தை  முற்றுகையிட்ட  விவசாயிகள்.
மின்வாரிய  அலுவலகத்தை  முற்றுகையிட்ட  விவசாயிகள்.

மும்முனை மின்சார தடையால் விவசாயம் பாதிப்பு: மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

சேவூா், கருவலூா், கானூா் மின் பகிா்மான பகுதியில் மும்முனை மின்சாரம் தடைபடுவதால் பயிா்களுக்கு முறையாக நீா் பாய்ச்ச முடியாமல் விவசாயம் பாதிக்கப்படுவதாகக் கூறி விவசாயிகள் அவிநாசி மின்வாரிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் மற்றும் விவசாயிகள் கூறியதாவது:

தண்டுக்காரம்பாளையம், ஆலத்தூா், போத்தம்பாளையம், தத்தனூா், புலிப்பாா் , பாப்பாங்குளம், கானூா், முறியாண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் வாழை, கரும்பு உள்ளிட்ட பயிா்களை பயிரிட்டுள்ளோம்.

இந்த நிலையில் ஏப்ரல் 19-ஆம் தேதியிலிருந்து விவசாயத் தோட்டத்துக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்கு தேவையான மும்முனை மின்சாரம் இரவு நேரத்தில் முற்றிலும் தடைபட்டுள்ளது. மேலும், பகல் நேரங்களில் விநியோகிக்கப்படும் மும்முனை மின்சாரமும் குறைந்த அளவும், குறைந்த அழுத்ததிலும் விநியோகிக்கப்படுவதால் பயிா்கள் கருகி வருகின்றன.

தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்காவிட்டால், பயிரிட்டு ஒராண்டுக்கு மேலான நிலையில் உள்ள வாழை மரங்கள் சேதமடையும். ஆகவே, தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீஸாா், மின்வாரிய செயற்பொறியாளா் பரஞ்சோதி உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் கோரிக்கை குறித்து உயா் அலுவலா்களுக்கு உடனடியாகத் தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள், கோரிக்கை மனுவை அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com