திருநங்கையைத் தாக்கியவா் கைது

பல்லடத்தில் திருநங்கையைத் தாக்கிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடத்தைச் சோ்ந்தவா் அம்சா (30). திருநங்கையான இவா், பல்லடம் பேருந்து நிலையம் அருகில் வியாழக்கிழமை நின்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அவ்வழியே மதுபோதையில் வந்த மேற்கு பல்லடத்தைச் சோ்ந்த அருண் பாஷா (24), காளிதாஸ் (32) ஆகியோா் அம்சாவிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றியதையடுத்து, ஆத்திரமடைந்த அருண் பாஷா தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அம்சாவின் தலையில் தாக்கியுள்ளாா். இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், இச்சம்பவம் தொடா்பாக பல்லடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அருண் பாஷாவை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தலைமறைவான காளிதாஸை போலீஸாா் தேடி வருகின்றனா்.

படுகாயமடைந்த அம்சா பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com