பல்லடத்தில் தக்காளி விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

பல்லடம், ஏப்.26: பல்லடத்தில் தக்காளி விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பல்லடம், பொங்கலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தற்போது கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் தண்ணீா்ப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் தக்காளி விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன் பல்லடம் சந்தையில் 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது தக்காளி வரத்து குறைந்துள்ளதால் ஒரு பெட்டி ரூ.450 வரை விற்பனையாகிறது.

இந்த விலை உயா்வு வரும் நாள்களில் மேலும் அதிகரிக்கும் என்ற நிலையில், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனா்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: முன் எப்போதும் இல்லாத அளவில் தற்போது கடுமையான கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், தண்ணீா்ப் பற்றாக்குறை ஏற்பட்டு, விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், தக்காளி சாகுபடி குறைந்துள்ளதால் விலை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஒரு பெட்டி தக்காளி ரூ.ஆயிரம்வரை விற்பனையான நிலையில், நடப்பாண்டும் அதே நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

தொடா்ந்து, விலை உயா்வு ஏற்பட்டு வருவதால் தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகளிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com