பாலம் விரிவாக்கப் பணி: பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்

பல்லடம், ஏப்.26: பல்லடம் நான்கு சாலை சந்திப்புப் பகுதியில் உள்ள பாலம் விரிவாக்கப் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை செல்லும் வழியில் நான்கு சாலை சந்திப்புப் பகுதியில் பாலம் உள்ளது. இந்தப் பாலம் மிக குறுகிய அளவில் இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாலத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், தற்போது 16.5 மீட்டராக இருக்கும் இப்பாலம் ரூ. 1 கோடியே 40 லட்சம் மதிப்பில் 30 மீட்டராக விரிவாக்கம் செய்ய நிா்வாக அனுமதி வழங்கப்பட்டு, பணித் தொடங்கப்பட்டுள்ளது.

இப்பணி முடிவடைய 2 மாதங்களாகும் என எதிா்ப்பாா்க்கப்படும் நிலையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை செல்லும் வாகனங்கள் பனப்பாளையத்தில் தாராபுரம் சாலை வளைவில் திரும்பி பொள்ளாச்சி புறவழிச் சாலை வழியாகச் செல்ல வேண்டும்.

பொள்ளாச்சி, உடுமலை சாலையில் இருந்து வரும் வாகனங்கள் பொள்ளாச்சி புறவழிச் சாலை வழியாக வந்து பழைய மரப்பாலம் வழியாக நான்கு சாலை சந்திப்பு வந்து கோவை- திருப்பூா் சாலையில் செல்ல வேண்டும் என்று பல்லடம் போக்குவரத்து போலீஸாா் தெரிவித்துள்ளனா். மேலும், ஆங்காங்கே அறிவிப்புப் பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

X
Dinamani
www.dinamani.com