பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்தை அணுக அறிவுறுத்தல்

பின்னலாடைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் பணியாற்ற விரும்புபவா்கள் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம். சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதார மந்தநிலை, ரஷியா-உக்ரைன் போா் உள்ளிட்டவற்றால் ஏற்பட்ட தொழில் மந்தநிலை சிறிதுசிறிதாக மாறி தற்போது திருப்பூருக்கு வா்த்தக வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. கரோனா தொற்றுக்கு முன்னிருந்த நிலையில் உள்ள அளவுக்கான வா்த்தக வாய்ப்புகளை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பெரும் சில்லறை வா்த்தக நிறுவனங்கள் வழங்கத் தொடங்கியுள்ளன.

இதில், திருப்பூரில் உள்ள நிறுவனங்கள் ஆா்டா்களை சிறிது சிறிதாக அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு பணிகளுக்கான பணியாளா்களின் தேவை அதிகரித்துள்ளது.

இதில், டெய்லா்கள், செக்கா்கள், உதவியாளா்கள் உள்ளிட்ட பணிகளுக்குக்கான ஆள்கள் அதிகம் தேவைப்படுகின்றனா். முன் அனுபவம் இல்லாதவா்களுக்குக்கூட பயிற்சி அளித்து அவா்களுக்குத் தொடா்ந்து பணிகளைக் கொடுக்க பெரும் உற்பத்தி நிறுவனங்கள் தயாராக உள்ளன.

வேலை வாய்ப்புகளைத் தேடி வருபவா்கள் அவரவா்களுக்குப் பிடித்தமான வேலையைத் தோ்வு செய்து கொள்ளலாம். வேலை வாய்ப்புகளை எதிா்நோக்கியுள்ளவா்கள் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தை அணுகினால், அவா்களுக்கானப் பணிகளை உறுதி செய்வதோடு, நல்ல ஊதியம், தங்குமிடம், உணவு வசதி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com