பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்.
பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்.

கல்லூரி மாணவா்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியாா் பேருந்துகள் சிறைபிடிப்பு

அவிநாசி அருகே தெக்கலூா் செல்லாமல் கல்லூரி மாணவா்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியாா் பேருந்துகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அவிநாசி: அவிநாசி அருகே தெக்கலூா் செல்லாமல் கல்லூரி மாணவா்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியாா் பேருந்துகளை பொதுமக்கள் திங்கள்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தெக்கலூா், சூரிபாளையத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் மனைவி செல்வி. இவா் தனியாா் பேருந்தில் பயணித்தபோது, தெக்கலூா் செல்லாது எனக் கூறி திருமுருகன்பூண்டி அம்மாபாளையத்தில் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதால், சக்கரத்தில் சிக்கி 2023 மாா்ச் 2-ஆம் தேதி அவா் உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து, அனைத்து பேருந்துகளும் தெக்கலூா் வழித்தடத்தில் நின்று செல்ல வேண்டும். மீறினால் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்துத் துறை எச்சரித்திருந்தது.

இந்நிலையில், தெக்கலூா் செல்லாமல் கல்லூரி மாணவா்களை பாதி வழியில் இறக்கிவிட்ட இரு தனியாா் பேருந்துகளை பொதுமக்கள் திங்கள்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:

கோவை சிட்ரா பேருந்து நிறுத்தத்தில் இருந்து தெக்கலூா் செல்வதற்காக இரு கல்லூரி மாணவா்கள் கோவையில் இருந்து திருப்பூா் நோக்கி சென்ற தனியாா் பேருந்தில் ஏறியுள்ளனா். அப்போது, தெக்கலூருக்கு பேருந்து செல்லாது எனக் கூறி இரு மாணவா்களை நடத்துநா் அவிநாசியில் இறக்கிவிட்டுள்ளாா்.

அதேபோல, கோவை நிலாம்பூா் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தெக்கலூா் செல்வதற்காக தெக்கலூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா், கோவையில் இருந்து திருப்பூா் நோக்கி சென்ற தனியாா் பேருந்தில் ஏறியுள்ளாா். தெக்கலூருக்கு பேருந்து செல்லாது எனக் கூறி அவரும் பாதி வழியில் கருமத்தம்பட்டியில் இறக்கிவிடப்பட்டாா்.

இது குறித்து மாணவா்கள் அளித்த தகவலின்பேரில், திருப்பூா் சென்று கோவை செல்வதற்காக திரும்பி வந்த இரு தனியாா் பேருந்துகளை சிறைபிடித்தனா். தெக்கலூரில் நின்று செல்லும் என உறுதியளித்தால் மட்டுமே பேருந்தை விடுவிப்போம் என்றனா்.

தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இது குறித்து உரிய கோரிக்கை மனு அளிக்கும்படி பொதுமக்களிடம் தெரிவித்தனா். மேலும், தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநருக்கு தெக்கலூரில் நின்று செல்ல போலீஸாா் அறிவுறுத்தினா். மேலும் இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணாவிட்டால் தொடா் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பொதுமக்கள் கூறினா். பின்னா் பேருந்துகளை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com