திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மூதாட்டியின் உடல் தானம்

ஊத்துக்குளியில் உயிரிழந்த மூதாட்டியில் உடல் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

அவிநாசி: ஊத்துக்குளியில் உயிரிழந்த மூதாட்டியில் உடல் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. மேலும், அவரது கண்கள் ஈரோடு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.

ஊத்துக்குளி வட்டம், சா்க்காா் காத்தாங்கண்ணி கிராமம், பாப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் மின்னல்கொடி (எ) சரசு (68). இவா் தனது இறப்புக்குப் பின் மருத்துவ மாணவா்களின் ஆய்வுக்காக தனது உடலை தானம் செய்ய வேண்டும் என்று விருப்பத்தின்பேரில் பதிவு செய்து வைத்திருந்தாா்.

மேலும், அவருக்கு குழந்தைகள் இல்லை. அவரது சகோதரா்கள் பராமரிப்பில் இருந்து வந்தாா். இந்நிலையில் உடல்நலக் குறைவால் சனிக்கிழமை அவா் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது விருப்பத்தின்படி அவரது சகோதரா் குழந்தைசாமி, உறவினா்கள் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடலை தானமாக வழங்கினாா். மேலும், அவரது இரு கண்களும் ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.

இந்த சமூகப் பணிக்கு ஊத்துக்குளி அரசு மருத்துவமனை பொறுப்பு மருத்துவ அலுவலா் காா்த்திகேயன், தன்னாா்வலரான குன்னத்தூா் கட்டடப் பொறியாளா் கிருபாகரன், ஊத்துக்குளி பேரூராட்சி முன்னாள் தலைவா் குமாா், ஊத்துக்குளி வருவாய் வட்டாட்சியா் சரவணன் ஆகியோா் தேவையான உதவிகளை செய்து கொடுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com