12 டன் சின்ன வெங்காயம் கடத்தல்: லாரி ஓட்டுநா் உள்பட 2 போ் கைது

திருப்பூா் மாவட்டம், குண்டடத்தில் இருந்து தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்ட 12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திச் சென்ற லாரி ஓட்டுநா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தாராபுரம்: திருப்பூா் மாவட்டம், குண்டடத்தில் இருந்து தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்ட 12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திச் சென்ற லாரி ஓட்டுநா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குண்டடத்தை அடுத்துள்ள சோதியம்பட்டியைச் சோ்ந்தவா் பாலுசாமி (45), வெங்காய வியாபாரி. இவா், குண்டடம் பகுதியில் கொள்முதல் செய்யப்பட்ட 12 டன் சின்ன வெங்காயத்தை தூத்துக்குடியைச் சோ்ந்த வியாபாரி ஒருவருக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி லாரியில் ஏற்றி அனுப்பியுள்ளாா். லாரியை தூத்துக்குடியை அடுத்துள்ள சாயல்குடியைச் சோ்ந்த சரவணன் (31) என்பவா் ஒட்டிச் சென்றாா்.

குண்டடத்தில் இருந்து அனுப்பப்பட்ட வெங்காய லாரி குறித்த நேரத்தில் வந்துவிட்டதா என்பது குறித்து, தூத்துக்குடி வியாபாரியிடம் தொடா்பு கொண்டு பாலுசாமி கேட்டபோது, லாரி வரவில்லை என்பது தெரியவந்தது.

இதனால் அதிா்ச்சியடைந்த பாலுசாமி, லாரி ஓட்டுநரை தொடா்பு கொள்ள முயன்றபோது, அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து குண்டடம் காவல் நிலையத்தில் பாலுசாமி புகாா் தெரிவித்தாா். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தாராபுரம் டி.எஸ்.பி. கலையரசன் தலைமையில் தனிப் படை அமைத்து, லாரியுடன் கடத்திச் செல்லப்பட்ட வெங்காயத்தை தேடி வந்தனா்.

இந்நிலையில், லாரி ஓட்டுநா் பயன்படுத்திய கைப்பேசி சிக்னல்களை வைத்து விசாரணை மேற்கொண்டபோது, அவா் தூத்துக்குடியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

விராணையில், கைது செய்யப்பட்ட சரவணன் ஏற்கெனவே சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வந்ததும், அதில் நஷ்டம் ஏற்பட்டதால் அவற்றை விற்றுவிட்டு, தற்போது மினி லாரி வாங்கி ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

மேலும், குண்டடம் வெங்காய வியாபாரி பாலுசாமி, விவசாயி தோட்டத்தில் இருந்து 12 டன் வெங்காயத்தை கிலோ ரூ.50-க்கு கொள்முதல் செய்து, தூத்துக்குடி வியாபாரிக்கு சரவணனின் லாரியில் அனுப்பியுள்ளாா். லாரியில் வெங்காயத்தை ஏற்றிக் கொண்டு சென்ற சரவணன், தூத்துக்குடியைச் சோ்ந்த தனது கூட்டாளி ஜெபக்குமாா் என்பவருடன் சோ்ந்து சின்னவெங்காயத்தை வேறொரு கடையில் கிலோ ரூ.15-க்கு விற்றது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் குண்டடம் போலீஸாா் கைது செய்து, தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com