பல்லடத்தில் இரும்புத் தகடு ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

பல்லடத்தில் இரும்புத் தகடு ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

பல்லடத்தில் இரும்புத் தகடு ஏற்றிச் சென்ற லாரி திருப்பத்தில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானது.

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சுபாஷ், லாரி ஓட்டுநா். இவா் கோவையில் இருந்து 35 டன் எடை அளவு கொண்ட கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய் தயாரிக்கும் இரும்புத் தகடு உருளைகளை ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

பல்லடம் அண்ணா சிலை திருப்பம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரியின் பின்பக்கத்தில் இருந்த இரும்பு தகடு உருளைகள் சரிந்து விழுந்தன. இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்தது. இதில் லாரி ஓட்டுநா் சுபாஷ் லேசான காயத்துடன் தப்பினாா்.

லாரியில் இருந்த ஒரு இரும்பு தகடு உருளை கீழே விழுந்து அருகில் இருந்த நகராட்சி பள்ளி சுற்றுச் சுவறில் மோதியதால் சுவா் சேதம் அடைந்தது. இந்த விபத்தால் திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இரும்பு தகடு உருளைகள் அதிக அளவு எடை கொண்டதாக இருந்ததால் இதையும், கவிழ்ந்த லாரியையும் கிரேன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி 2 மணி நேரம் நடைபெற்றது. அதிகாலை நேரம் என்பதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

விபத்து குறித்து பல்லடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com