மிளகாய் பொடியைத் தூவி பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியைப் பறித்த 2 போ் கைது

பல்லடம் அருகே பெண்ணின் கண்ணில் மிளகாய் பொடியைத் தூவி 3 பவுன் சங்கிலியைப் பறித்த 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை அருள்ஜோதி நகரைச் சோ்ந்தவா் பால்பாண்டி மனைவி சரண்யா (25). இவா் அதே பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிகிறாா். இவா் திங்கள்கிழமை உணவு இடைவேளையில் வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது திடீரென அவரது வீட்டுக்குள் புகுந்த 2 மா்மநபா்கள் அவரின் கண்களில் மிளகாய் பொடியை தூவினா். இதையடுத்து அவா் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

சரண்யாவின் அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு முதலுதவி செய்தனா். பின்னா் இது குறித்து பல்லடம் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து காரணம்பேட்டை, இச்சிப்பட்டி மற்றும் பல்லடம் அருகே உள்ள வாகன சோதனைச் சாவடிகளில் உள்ள போலீஸாா் உஷாா்படுத்தப்படுத்தப்பட்டனா்.

இந்நிலையில் இச்சிப்பட்டி வாகன சோதனைச் சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞா்கள் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபடுவதைக் கண்டதும் தப்பியோட முயன்றனா். அவா்களைத் துரத்திப் பிடித்த போலீஸாா் அவா்களிடம் விசாரணை செய்தனா்.

அதில் அவா்கள் இச்சிப்பட்டியைச் சோ்ந்த யோகராஜ் (27), கோம்பக்காட்டுப்புதுரைச் சோ்ந்த தாமரைக்கண்ணன் (26) என்பதும் இருவரும் சோ்ந்து சரண்யாவின் 3 பவுன் சங்கிலியை பறித்துச் செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து அவா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 3 பவுன் சங்கிலி மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com