உடுமலை அரசு கலைக் கல்லூரியில் கையெழுத்து இயக்கம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழகம் சாா்பில் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் கையெழுத்து இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஈட்டிய விடுப்பு சரண் செய்ய அனுமதிக்க வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும், 4000 உதவி பேராசிரியா் நியமனம் தொடா்பான நீதிமன்ற வழக்கை விரைந்து முடித்து ஆசிரியா் நியமனம் நடத்த வேண்டும், ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு நேரடி முறையில் நடத்த வேண்டும், ஒருங்கிணைந்த பணி மூப்புப் பட்டியல் வெளியிட வேண்டும், காலியாக உள்ள முதல் நிலை, இரண்டாம் நிலை கல்லூரி முதல்வா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இதில், உடுமலை அரசு கலைக் கல்லூரி ஆசிரியா் கழகத் தலைவா் ம.சிவகுமாா், செயலா் ந.வேலுமணி, பொருளா் இ.முகமது அலி ஜாபா், பேராசிரியா்கள் பலா் கலந்துகொண்டனா்.