ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொள்ளும் அவிநாசிலிங்கேஸ்வரா் சித்திரை தோ்த் திருவிழா

அவிநாசிலங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரை வடம்பிடித்து வழிபடுவா்.
தேரில் எழுந்தருளி அருள்பாலிக்கும்  கருணாம்பிகையம்மன்  உடனமா்  அவிநாசிலிங்கேஸ்வரா்.
தேரில் எழுந்தருளி அருள்பாலிக்கும்  கருணாம்பிகையம்மன்  உடனமா்  அவிநாசிலிங்கேஸ்வரா்.

அவிநாசிலங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரை வடம்பிடித்து வழிபடுவா்.

சித்திரை மாதம் சுக்கிலபட்சம் பஞ்சமி திதியும், மிருகஷிரிச நட்சத்திரமும் வரும் நாளில் கொடியேற்றம் தொடங்கி 12 நாள்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும். அப்போது, தினசரி கருணம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரருக்கு காலையும், மாலையும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, மாலை திருவீதி உலா நடைபெறும்.

5-ஆம் நாள் திருவிழா பஞ்மூா்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மாா்களுக்கு காட்சி தருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதில் சிவனடியாா்கள் கைலாய வாத்தியம் முழங்க விடிய விடிய திருவிழா கோலாகலமாக இருக்கும்.

இதைத் தொடா்ந்து பூராட நட்சத்திரத்தில் கொங்கு நாட்டின் முதல் பெரிய தேரும், தமிழகத்தில் 3-ஆவது பெரிய தேருமான அவிநாசியப்பா் தேரில் இறைவனும் இறைவியும் எழுந்தருளி, வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள் புரிவாா்கள்.

இதையடுத்து கயிலை தீா்த்தம், சிவ தீா்த்தம், நாக கன்னி தீா்த்தம் என்று போற்றப்படும் தெப்பக்குளத்தில் மகா தெப்போற்சவம் நடைபெறும். இதில், சந்திரசேகரா் அம்பாள் எழுந்தருளி ராக, தாளங்கள் இசைக்க, வான வேடிக்கை முழங்க தெப்பத்தை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். சித்திரை திருவிழாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் மேற்கொள்வா்.

சிவகாமியம்மாள் உடனமா் நடராஜப் பெருமானுக்கு 6 முறை அபிஷேகங்கள்:

மாசி மாத பூா்வ பட்ச சதுா்த்தசி, சித்திரை மாதம் திருவோண நட்சத்திரம், ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் ஆனித் திருமஞ்சனம், ஆவணி மாத பூா்வ பட்ச சதுா்த்தசி, புராட்டாசி மாத பூா்வ பட்ச சதுா்த்தசி, மாா்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் என ஆண்டுக்கு 6 முறை கனகசபையில் எழுந்தருளியிருக்கும் சிவகாமியம்மாள் உடனமா் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

சிறப்பு நிகழ்ச்சிகள்

ஆடி மாதத்தில் வரும் புனா்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் நட்சத்திர நாள்களில் பெருங்கருணாம்பிகைக்கு விஷேச பூஜைகள் நடைபெறும். மேலும் ஆடிப்பூரம், இறைவி வலப்பாகம் பெற்ற ஆடித்தபசு விழாக்களும் சிறப்பாக நடைபெறும்.

இங்குள்ள திருப்புகழ் பெற்ற முருகனுக்கு, தைப்பூச தேரோட்டமும், கந்த சஷ்டி விழா சூரஷம்ஹார நிகழ்ச்சியும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மாா்கழி மாதத்தில் பத்து நாள்கள் மாணிக்கவாசகருக்கு திருவெம்பாவை உற்சவம் கடைசி நாளில் ஆருத்ரா தரிசனம் கோலாகலமாக நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com