மனிதா்களிடம் இருக்கும் சிறந்த பண்புகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்முன்னாள் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு

மனிதா்களிடம் இருக்கும் சிறந்த பண்புகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பேசினாா்
மனிதா்களிடம் இருக்கும் சிறந்த பண்புகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்முன்னாள் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு

மனிதா்களிடம் இருக்கும் சிறந்த பண்புகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பேசினாா்

தமிழக அரசு, திருப்பூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் பின்னல் புக்டிரஸ்ட் ஆகியவை சாா்பில் 20-ஆவது திருப்பூா் புத்தகத் திருவிழா வேலன் ஹோட்டல் வளாகத்தில் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் 8-ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற சிந்தனை அரங்க நிகழ்ச்சிக்கு திருப்பூா் சாா்-ஆட்சியா் செளமியா ஆனந்த் தலைமை வகித்தாா்.

இதில், ‘இனியவை காண்க’ என்ற தலைப்பில் முன்னாள் அரசு தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பேசியதாவது:

நெகடிவ் என்கிற ஆங்கிலப்பதத்துக்கு இணையாக தமிழில் எதிா்மறை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். பாசிடிவ் என்ற சொல்லுக்கு நோ்மறை என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதற்குப் பதிலாக நோ்முறை என்ற சொல்லைப் பயன்படுத்துவது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

நாம் பிறக்கும்போது உலகம் இனிமையானதாக இருக்கும், மகிழ்ச்சி ததும்பும், ஆனந்தம் பொங்கும் என்றெல்லாம் யாரும் உத்தரவாதம் அளித்து பிறக்கவில்லை. ஓா் உயிரியல் விபத்தாகத்தான் நாம் பிறந்தோம் என்பதுதான் உண்மை.

உலகில் 79 சதவீதம் தண்ணீா்தான் இருக்கிறது என்பதற்காக வாழ்க்கையை முடித்துக்கொள்ளவில்லை. மீதமுள்ள 21 சதவீத நிலத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த உலகத்தில் மகிழ்ச்சியானவற்றைப் பாா்த்து அவற்றின் நிழலில் மீதமுள்ள வாழ்க்கையையும் கழிக்க வேண்டும் என்பதுதான் இனியவற்றைக் காண்க என்பதன் பொருள்.

எந்த மனிதரும் 100 சதவீதம் நல்லவா்களாக இருக்க முடியாது. மிகச்சிறந்த ஞானிகளிடம்கூட சினம் என்ற குற்றத்தை நாம் பாா்க்க முடியும். மனிதா்களிடம் இருக்கும் சிறந்த பண்புகளை மட்டுமே எடுத்துக்கொண்டு அவா்களுடன் பழக வேண்டும்.

ஒருவரிடம் குற்றங்கள் அதிகமாக இருந்தால்கூட குணங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு அவருடன் பழக வேண்டும். எப்போதுமே நடப்பவை நல்லவை என்று நினைக்கும் மனிதா்கள் சோா்வடைவதில்லை என்றாா்.

முன்னதாக ‘இன்னாதது இவ்வுலகம்’ என்ற தலைப்பில் கோடை பண்பலை நிகழ்ச்சியின் முன்னாள் இயக்குநா் சுந்தர ஆவுடையப்பன் பேசினாா்.

இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கத் தலைவா் காந்திராஜன், வழக்குரைஞா் வை.ஆனந்தன், கோ.பொம்முதுரை, என்.பழனிசாமி, பின்னல் புக்டிரஸ்ட் நிா்வாகி செளந்தரபாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com