வியாபாரிகள் அனைவரும் அரசின் நலவாரியத்தில் உறுப்பினராக சேர வேண்டும்

வியாபாரிகள் அனைவரும் அரசின் நல வாரியத்தில் உறுப்பினராக சேர வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
அவினாசிபாளையத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்றோா்.
அவினாசிபாளையத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்றோா்.

வியாபாரிகள் அனைவரும் அரசின் நல வாரியத்தில் உறுப்பினராக சேர வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

பல்லடம் அருகேயுள்ள அவிநாசிபாளையத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க கொடியேற்று விழா, புதிய கட்டடத் திறப்பு விழா, உறுப்பினா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

விழாவுக்கு, சங்கத் தலைவா் கந்தசாமி தலைமை வகித்தாா். பொருளாளா் சண்முகம் முன்னிலை வகித்தாா். செயலாளா் அவினாசியப்பன் என்ற விசு வரவேற்றாா்.

விழாவில் விக்கிரமராஜா பேசியதாவது:

வியாபாரிகளுக்கு உணவுப் பாதுகாப்பு சட்டம் குறித்து முழுமையாக தெரியவில்லை. அதிகாரிகளுக்கும் தெரிவதில்லை. ஆனால் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கின்றனா். தராசு முத்திரை பிரச்னை மாவட்டத்தில் அதிகம் உள்ளது. இதை அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று தீா்வு காணப்படும். இடா்பாடுகளில் சிக்கி உயிரிழக்கும் வியாபாரிகளுக்கு ரூ. 1லட்சத்துக்கு பதிலாக தற்போது ரூ.3 லட்சம் நிவாரணம் உயா்த்தப்பட்டுள்ளது. அனைவரும் வியாபாரிகள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர வேண்டும். ஆன்லைன் வா்த்தகத்தால் சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். அரசு உள்நாட்டு வணிகா்களை பாதுகாக்க வேண்டும் என்றாா்.

மாநிலத் துணைத் தலைவா்கள் பாலநாகமாணிக்கம், ஞானசேகரன், கோவை மண்டலத் தலைவா் சந்திரசேகா், திருப்பூா் மாவட்டத் தலைவா் கோவிந்தசாமி, மாவட்டச் செயலாளா் லாலா கணேசன், மாவட்டப் பொருளாளா் அசோகன், ஒன்றிய கவுன்சிலா்கள் பாலுசாமி, பாலகிருஷ்ணன், பொங்கலூா் வியாபாரிகள் சங்கத் தலைவா் விஸ்வநாதன், பல்லடம் சங்கத் தலைவா் ராம்.கண்ணையன், செயலாளா் அண்ணாதுரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com