ஆல்கொண்டமால் கோயிலில் தமிழா் திருநாள் விழா: 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்பு

உடுமலை அருகே உள்ள ஆல்கொண்டமால் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தமிழா் திருநாள் விழாவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.
திருவிழாவையொட்டி கோயிலில் குவித்து வைக்கப்பட்டுள்ள பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்திய உருவ பொம்மைகள். ~கோயிலில் கால்நடைகள் தானம் செய்த பக்தா்கள்.
திருவிழாவையொட்டி கோயிலில் குவித்து வைக்கப்பட்டுள்ள பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்திய உருவ பொம்மைகள். ~கோயிலில் கால்நடைகள் தானம் செய்த பக்தா்கள்.


உடுமலை: உடுமலை அருகே உள்ள ஆல்கொண்டமால் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தமிழா் திருநாள் விழாவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்த சோமவாரபட்டியில் அமைந்துள்ளது ஆல்கொண்டமால் கோயில். இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இக்கோயிலில் ஆண்டுதோறும் பொங்கலை ஒட்டி மூன்று நாள்களுக்கு தமிழா் திருநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடப்பு ஆண்டு தமிழா் திருநாள் விழா கடந்த 16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் முதல்நாள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து சிறப்பு அபிஷேக நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன. இதில், பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், கால்நடைகளின் காவல் தெய்வமான ஆல்கொண்டமால் கோயிலுக்கு கால்நடை உருவ பொம்மைகளை பக்தா்கள் நோ்த்திக்கடனாக செலுத்தினா்.

உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் மாட்டு வண்டிகளில் வந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் பலா் கன்றுக்குட்டிகளை கோயிலுக்கு தானமாக வழங்கினா்.

பொங்கல் விழாவையொட்டி கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ராட்டினம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்களில் பக்தா்கள் விளையாடி மகிழ்ந்தனா். மேலும், சா்க்கஸ் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றிருந்தன. இந்தத் திருவிழாவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பக்தா்கள் கோயிலுக்கு செல்லும் வகையில் உடுமலையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். தமிழா் திருநாளின் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெறுகிறது. அன்று இரவு 10 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும், வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com