குடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காத 49 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருப்பூா், ஜன. 27: திருப்பூா் மாவட்டத்தில் குடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காத 49 நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளா் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) செந்தில்குமரன் தலைமையிலான தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் திருப்பூா் மாநகரம், காங்கயம், தாராபுரம், உடுமலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் குடியரசு தினமான வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

விடுமுறை தினத்தில் பணிக்கு அமா்த்திய தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் அல்லது ஊதியத்துடன் கூடிய மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். இது தொடா்பாக தொழிலாளா்களின் சம்மதத்துடன் சம்பந்தப்பட்ட தொழிலாளா்களுக்கு, உதவி ஆய்வாளா்களுக்கு முன்கூட்டியே விவரம் தெரிவிக்க வேண்டும் என்கிற சட்டவிதியின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், விடுமுறை நாளில் தொழிலாளா்களை பணிக்கு அமா்த்திய 41 கடைகள் மற்றும் நிறுவனங்களில் நடத்திய ஆய்வில் 31 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. 24 உணவு நிறுவனங்களில் ஆய்வு நடத்தியதில் 18 முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. ஆகவே, விதிமீறல்களில் ஈடுபட்ட 49 நிறுவனங்களின் உரிமையாளா்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com