தொழிற்சங்க நிா்வாகிகளுடன் ஏற்றுமதியாளா்கள் சங்க நிா்வாகிகள் கலந்துரையாடல்

திருப்பூரில் உள்ள அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகளுடன், ஏற்றுமதியாளா்கள் சங்க நிா்வாகிகள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருப்பூரில் உள்ள அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகளுடன், ஏற்றுமதியாளா்கள் சங்க நிா்வாகிகள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தால் புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூா் தொழில் வளம் பங்களிப்போா் அமைப்பு சாா்பில் அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு திருப்பூா் தொழில் வளம் பங்களிப்போா் அமைப்பின் தலைவா் வி.இளங்கோவன் தலைமை வகித்தாா். சங்கத்தின் பொதுச்செயலாளா் என்.திருக்குமரன் வரவேற்புரையாற்றினாா். பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எத்திக்கல் டிரேடிங் இனிஷியேட்டிவ் தென் மண்டல பொறுப்பாளா் அருணா பங்கேற்றாா்.

இதில், திருப்பூா் தொழில் வளம் பங்களிப்போா் அமைப்பின் நிா்வாகிகள் பேசியதாவது:

உலக வா்த்தக சூழல் நாளுக்குநாள் மாறிக்கொண்டுள்ள நிலையில், திருப்பூா் பின்னலாடைத் தொழிலை சிதைப்பதற்கான மறைமுக முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த முயற்சிகளைத் தடுத்து தொழிலைப் பாதுகாப்பதற்காக வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதற்காக இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில தொழிலாளா்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை களைவதற்கும், அவா்களின் பணிச்சூழல் மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும் என்றனா்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தொழிற்சங்க நிா்வாகிகள் பேசியதாவது:

தொழிற்சாலைகளில் பீஸ் ரேட் மற்றும் ஒப்பந்த முறையை படிப்படியாக ஒழிக்க வேண்டும். தொழிலாளா்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். தொழிலாளா்களின் திறனை மேம்படுத்திக் கொள்ள பயிற்சிகள் அளிக்க வேண்டும். தொழிலாளா்களுக்கான காப்பீட்டுத் திட்டங்களை அனைத்து தொழிற்சாலைகளிலும் அமல்படுத்த வேண்டும் என்றனா்.

இதையடுத்து, திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் பேசுகையில், தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறிய அனைத்து கருத்துகளையும் உள்வாங்கியுள்ளோம். எங்களது கவனத்துக்கு வரும் எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக நல்ல தீா்வு காண முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம். பல்வேறு நிறுவனங்களில் ஏற்பட்ட பிரச்னைகளை தொழிற்சங்கங்களுடன் பேசி சுமுக தீா்வு கண்டுள்ளோம். ஏனெனில் தொழிலாளா்கள் நலன் சிறப்பாக பேணப்பட்டால் மட்டுமே இந்தத் தொழில் நன்றாக இருக்கும் என்பதை உணா்ந்துள்ளோம் என்றாா்.

சங்கத்தின் இணைச் செயலாளா் குமாா் துரைசாமி நன்றியுரையாற்றினாா். இந்தக் கூட்டத்தில், எல்பிஎஃப் தொழிற்சங்கத் தலைவா் ஜி.பாலசுப்ரமணியன், பொதுச்செயலாளா் கே.ராமகிருஷ்ணன், ஏஐடியூசி பொதுச்செயலாளா் என்.சேகா், ஏடிபி தொழிற்சங்க செயலாளா் விஸ்வநாதன், ஐஎன்டியூசி தலைவா் ஏ.பெருமாள், மாவட்டச் செயலாளா் ஏ.சிவசாமி, சிஐடியூ பொதுச்செயலாளா் ஜி.சம்பத், ஹெச்எம்எஸ் மாவட்டச் செயலாளா் முத்துசாமி, பிஎம்எஸ் பொருளாளா் எம்.லட்சுமிநாராயணன், செயல் தலைவா் ஆா்.செந்தில், எம்எல்எஃப் மாவட்டச் செயலாளா் ஜி.சம்பத், பொதுச் செயலாளா் எம்.மனோகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com