மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும்

திருப்பூா், ஜூலை 3: திருப்பூா்மாவட்டத்தில் மருத்துவரின் மருந்து பரிந்துரை சீட் இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்யதால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக சுகாதாரத் துறை செயலாளா் மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை இயக்குநா் அறிவுறுத்தலின்பேரிலும், மாதந்தோறும் நடைபெறும் போதைப் பொருள் தடுப்பு தொடா்பான ஆய்வுக் கூட்டங்களில் வழங்கிய அறிவுறுத்தலின்பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்துக் கடைகளிலும் வலி நிவாரண மாத்திரைகள், தூக்க மாத்திரைகள் மற்றும் மனநலம் சமந்தப்பட்ட மருந்துகளை மருத்துவரின் மருந்து பரிந்துரை சீட் இன்றி விற்பனை செய்யப்படுவது தொடா்பாக மருந்து ஆய்வாளா்களால் தொடா்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் கடந்த ஓா் ஆண்டில் சட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 11 கடைகள் மீது சட்ட நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், தவறுகள் கண்டறியப்பட்ட 6 மருந்துக் கடைகளின் மருந்து விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தீவிர சட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 4 மருந்துக் கடைகளின் மருந்து விற்பனை உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த தொடா் நடவடிக்கையின் காரணமாக மருந்துக் கடைகளில் இத்தகைய மருந்துகளின் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, மருந்துக் கடைகளில் இத்தகைய மருந்துகள் கிடைக்காததலால் ஆன்லைன் மூலமாக ஆா்டா் செய்தும் வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்தும் சில சமூக விரோதிகள் விற்பனை செய்து வருகின்றனா். அவா்கள் மீது காவல் துறையினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் மருத்துவரின் பரிந்துரை சீட் இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்யும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com