வெள்ளக்கோவில் அருகே மாடுகள் திருடிய 4 போ் கைது

வெள்ளக்கோவில், ஜூலை 3: வெள்ளக்கோவில் அருகே மாடுகள் திருடியதாக 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தன.

வெள்ளக்கோவில் வீரசோழபுரம் பொன்பரப்பியைச் சோ்ந்தவா் விவசாயி பிரதீப் குழந்தைவேல் (33). இவருடைய நான்கு மாடுகள் கடந்த ஜூன் 17-ஆம் தேதி இரவு மேய்ச்சல் காட்டிலிருந்து திருடு போனது.

இது குறித்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். காவல் நிலைய ஆய்வாளா் எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையில் உதவி ஆய்வாளா் ஜெயக்குமாா், காவலா்கள் அடங்கிய தனிப் படை அமைக்கப்பட்டது.

தனிப் படை போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில் வெள்ளக்கோவில் வள்ளியிரச்சல் அருகே உள்ள தென்னங்கரைப்பாளையத்தைச் சோ்ந்த சக்திவேல் (42), அவரது நண்பா்கள் கோவை மாவட்டம், ஆனைமலை திவான்சாபுதூா் மகாபிரபு (23), ஆனைமலை கணபதிபாளையம் பாறைமேடு சந்துரு (21), ஜெயசூா்யா (19) ஆகியோரைக் கைது செய்தனா்.

மேலும், அவா்களிடம் இருந்து 3 மாடுகள், ரூ.30 ஆயிரம், ஒரு இருசக்கர வாகனம், திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட மினி ஆட்டோ ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com